Last Updated : 01 Nov, 2017 11:20 AM

 

Published : 01 Nov 2017 11:20 AM
Last Updated : 01 Nov 2017 11:20 AM

இன்று சேலம் நகராட்சி உருவான தினம்: கலை, அரசியலில் முத்திரை பதித்த சேலம்

அரசியல், கலைத்துறையில் முத்திரை பதித்த சேலம் மாநகரின் 152-வது தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

கடந்த 1866-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டது. அப்போதைய ஆட்சியர் அர்பத்நாத், நகராட்சி தலைவராக இருந்தார். 1888-ம் ஆண்டு சேலம் நகராட்சி நியமன தலைவராக ஷேக்மொய்தீன் கான் பகதூர் பொறுப்பேற்றார். 1917-ம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நகராட்சி தலைவராக ராஜகோபாலாச்சாரியார் பொறுப்பேற்றார்.

சேலத்தை சேர்ந்த குமாரமங்கலம் ஜமீன் பரம்பரையில் தோன்றிய சுப்பராயன் 1926-ம் ஆண்டு மெட்ராஸ் மாகாண முதல்வராகவும், அடுத்ததாக ராஜாஜியும், தற்போது, எடப்பாடி கே.பழனிசாமி என மூன்று முதல்வர்களை உருவாக்கிய பெருமை சேலத்தை சேரும். அரசியல், வரலாற்றில் பல முத்திரை பதித்த சேலம் மாநகரம், கலைத்துறையிலும் தனக்கென தனி இடம் பிடித்து சிறப்புற்றுள்ளது.

கடந்த 1936-ம் ஆண்டு டிஆர் சுந்தரம், மாடர்ன் தியேட்டர்ஸை உருவாக்கி தமிழக திரைத்துறையில் முன்னோடி மாநகரமாக சேலத்தை அடையாளப்படுத்தினார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் கருணாநிதி, எம்ஜிஆர், விஎன்.ஜானகி, என்டி ராமாராவ் ஆகிய நான்கு முதல்வர்கள் பங்கேற்ற பெருமையும் உண்டு.

இந்தியாவில் முதல் முதலாக நகராட்சி மூலம் கல்லூரி நடத்தப்பட்ட சிறப்பும் சேலம் நகராட்சிக்கு உண்டு. கடநத 1941-47-ம் ஆண்டில் நகராட்சி தலைவராக இருந்த ரத்தினசாமி, சேலம் முனிசிபல் கல்லூரியை செரி ரோட்டில் தொடங்கினார். நகராட்சி மூலம் கல்லூரியை இயக்கி, கல்விக்கான சேவையை ஆற்றியதும் இங்கே தான். சேலம் நகராட்சி கடந்த 1996-ம் ஆண்டு மாநகராட்சியாக அந்தஸ்து பெற்றது,

முதல் மாநகராட்சி மேயராக சூடாமணியும், கடந்த 2006-ம் ஆண்டு, சேலம் மாநகராட்சி முதல் பெண் மேயராக ரேகாபிரியதர்ஷிணியும் பொறுப்பு வகித்தனர். சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டு இன்று 152-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

அரசு விழா வேண்டும்

சேலம் வரலாற்றுச் சங்க பொதுச் செயலாளர் பர்னபாஸ் கூறியதாவது:

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலத்தில் இருந்தும் சேலம் 152-வது தினம் அரசு விழாவாக இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழக முதல்வர் அரியணையை சேலத்தை சேர்ந்த மூவர் அலங்கரித்துள்ள நிலையில், சேலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் மறந்து விட்டன. வரும் ஆண்டுகளில் சேலம் தினத்தை அரசு விழாவாக கொண்டாடி, பள்ளி, கல்லூரி குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் போட்டிகள் வைத்து, பரிசு வழங்கி சேலத்தின் வரலாற்று, அரசியல், கலை பெருமைகளை உலகறிய செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x