Published : 07 Nov 2017 10:17 AM
Last Updated : 07 Nov 2017 10:17 AM

விவசாயிகளுக்கு கைகொடுக்கும் ‘காய்கறி கிராமங்கள்’ - தோட்டக் கலைத்துறையின் தொலைநோக்குப் பார்வை

எந்த இடத்தில் என்ன விளையும், இருக்கின்ற தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி எத்தகைய பயிர்களை பயிர்செய்து லாபம் ஈட்டலாம் என்பது போன்ற புரிதல் சரிவர இல்லாததால்தான் நமது விவசாயிகள் பெரும்பாலான நேரங்களில் அவதிப்படுகிறார்கள். இந்த அவதியைப் போக்கவும் மகசூலை இரட்டிப்பாக்கவும் ‘காய்கறி கிராமங்கள்’ என்ற யோசனையை கையிலெடுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது மதுரை மாவட்ட தோட்டக் கலைத்துறை!

veg_2.jpg பூபதி rightபின்தங்கிய மதுரை மாவட்டம்

மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் விவசாயத்தில் மதுரை பின்தங்கிய மாவட்டமாகவே இருக்கிறது. இந்த பழைய வரலாற்றை மாற்றவே மதுரை மாவட்ட நிர்வாகமும் தோட்டக் கலைத் துறையும் இணைந்து, ‘காய்கறி கிராமங்கள்’ திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.

மண் வளமும் நீர் வளமும் இருக்கும் கிராமங்களைத் தேர்வுசெய்து தத்தெடுத்து அங்குள்ள முன்னோடி விவசாயிகளை ஊக்குவித்து, அவர்களை ஆண்டு முழுவதும் காய்கறிகளை உற்பத்தி செய்யவைத்து மகசூலை இரட்டிப்பாக்குவது - இதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

இதற்காக, மதுரை மாவட்டத்தில் முதல்கட்டமாக நைத்தான்பட்டி, பொதும்பு, தென்பழஞ்சி உள்ளிட்ட 13 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு அந்த கிராமங்களில் காய்கறி சாகுபடியை தொடங்கியுள்ளனர். தற்போது, இந்த திட்டத்தில் பயிரிடப்பட்ட வெண்டை, புடலை உள்ளிட்டவை அறுவடைக்கு தயாராகிவிட்டதில் விவசாயிகளுக்கும் தோட்டக்கலைத் துறையினருக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி.

காய்கறி கிராமங்கள்

அந்த கிராமங்களுக்கு நம்மையும் அழைத்துச் சென்று மகிழ்ச்சியை நம்மிடமும் பகிர்ந்து கொண்டார்கள். இந்த யோசனை எப்படி வந்தது என மதுரை மாவட்ட தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் பூபதியிடம் கேட்டோம். “இதுக்கு தூண்டுகோலாக இருந்தவர் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ்தான்” என்ற முன்னுரையுடன் நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

‘‘மாதா மாதம் நடக்கும், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை உன்னிப்பாக கவனித்து வந்த ஆட்சியர், ஒரு நாள் எங்களை அழைத்து சொன்ன விஷயம் தான் இந்த ‘காய்கறி கிராமங்கள்’ ஐடியா. நாட்டின் மொத்த சாகுபடி பரப்பில் 20 சதவீதம்தான் தோட்டக் கலைப் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. ஆனால், 80 சதவீதத்தில் உற்பத்தியாகும் வேளாண் பயிர்களுக்கு இணையான வருவாயை தோட்டக்கலைப் பயிர்களிலிருந்து எடுக்கலாம்.

சந்தைப்படுத்தவும் ஆலோசனை

தமிழகத்தைப் பொறுத்தவரை, உள்ளூர் காய்கறி தேவைகளுக்கு பெரும்பாலும் வெளிமாநிலங்களைச் சார்ந்தே இருக்கிறோம். தேவை அதிகமாக இருப்பதால் தட்டுப்பாடு அதிகமாகி சில நேரங்களில் விலை உச்சத்தைத் தொடுகிறது. சில நேரங்களில் சில காய்கறிகள் தேவைக்கு அதிகமாக உற்பத்தியாகி சாலையில் கொட்டப்படுகின்றன. ஆனால், ‘காய்கறி கிராமங்கள்’ திட்டத்தில் இந்தச் சங்கடங்களுக்கு வாய்ப்பில்லை. பயிர் செய்வதற்கான யோசனையையும், மானியமும் கொடுத்துவிடுவதோடு நின்றுவிடாமல், காய்கறிகளைச் சந்தைப்படுத்துவதிலும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குகிறோம்” என்று சொன்னார் பூபதி.

ஒரே வகை காய்கறிகளை பயிரிடுவதால்தான் பல நேரங்களில் விளைபொருட்களுக்கான கட்டுபடி விலை கிடைப்பதில்லை. ஆனால், காய்கறி கிராமங்கள் திட்டத்தில் வெவ்வேறு வகையான காய்கறிகளை அனைத்து பருவ காலங்களிலும் சாகுபடி செய்யவைக்க இருக்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் மொத்தம் 20 ஆயிரம் ஹேக்டேரில் தோட்டக் கலைப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இதில், 2 ஆயிரம் ஹேக்டேரில் மட்டுமே தற்போது காய்கறி விளைவிக்கப்படுகிறது. இதில், வெண்டை, புடலை, கத்திரி, தக்காளி, வெங்காயம் மட்டுமே அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. மற்ற காய்கறிகளுக்கு நல்ல சந்தை வாய்ப்புகள் இருந்தும் அவற்றைப் பயிரிட யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.

தனியான திட்டம் ஏதுவுமில்லை

இதை விவசாயிகளுக்குப் புரியவைத்து, மற்ற காய்கறிகளையும் பயிரிடவைப்பதும் இந்தத் திட்டத்தின் அடுத்த இலக்காம். இதன் மூலம், தற்போது 2 ஆயிரம் ஹெக்டேராக இருக்கும் காய்கறி சாகுபடி பரப்பை 4 ஆயிரம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக வட்டாரம் வாரியாக சென்று கிராமங்களைத் தேர்வு செய்து, அவற்றை 100 சதவீதம் காய்கறிகளை விளைவிக்கும் பகுதியாக மாற்றவிருப்பதாகச் சொல்கிறார்கள் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள்.

“இந்த ‘காய்கறி கிராமங்கள்’ திட்டத்தில் சேரும் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள், இடுபொருட்கள் வழங்குகிறோம். இதற்காக தனி திட்டமெல்லாம் ஏதுமில்லை. ஏற்கனவே இருக்கும் தேசிய தோட்டக்கலை இயக்கம், பெருநகர காய்கறி தொகுப்பு வளர்ச்சித் திட்டம், பிரதம மந்திரி வேளாண் வளர்ச்சித் திட்டம், மானாவாரி பரப்பு விரிவாக்கத் திட்டம் உள்ளிட்டவை மூலமாகவே இந்த சலுகைகளை வழங்குகிறோம்.

இரட்டிப்பாக்குவதே..

மதுரை மாவட்டத்தில் காய்கறி சாகுபடிக்கேற்ற செம்மண் பூமி அதிகமாக இல்லை. கரிசல் மண் பூமி அதிகமாக இருப்பதால் அங்கே தொழு உரம் சேர்த்து காய்கறிகளைப் பயிரிடலாம். ஒவ்வொரு பகுதியிலும் அந்தப் பகுதியில் விளையக்கூடிய காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிரிட வைத்து, விவசாயிகளுக்கு நல்ல வருவாயை ஏற்படுத்தித் தருவதுடன் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதும் காய்கறி கிராமங்கள் திட்டத்தின் முக்கிய இலக்கு’’ என்கிறார் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பூபதி.

படங்கள்: ஜி.மூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x