Published : 21 Nov 2017 10:05 AM
Last Updated : 21 Nov 2017 10:05 AM
சென்னை சென்ட்ரல் மேம்பாலத்தில் அணிவகுத்து நிற்கும் மாநகர பேருந்துகளால் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சரியான நேரத்துக்கு ரயில்களைப் பிடிக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சென்னை மாநகரின் முக்கிய மையப்பகுதியாக சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளது. குறிப் பாக பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, அண்ணாசாலை வழி யாக வரும் மாநகர பேருந்துகள், இதர வாகனங்கள் பிராட்வேக்கு செல்ல இது முக்கியமான வழித்தடமாக உள்ளது. பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் சாலைகளும் குறுகியதாக உள்ளன. இதேபோல், அண்ணாசாலையில் இருந்து பல்லவன் சாலை வழியாக வரும் வாகனங்களும் அதிகரித்துள்ளதால் சென்ட்ரல் மேம்பாலத்திலேயே வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நிற்கின்றன. குறிப்பாக, மாலை முதல் இரவு 11 மணி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
20 நிமிடங்கள் தாமதம்
இது தொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறியதாவது: ரயில் மற்றும் பேருந்துகளில் மாறிச் செல்லும் முக்கிய போக்குவரத்து மையமாக சென்ட்ரல் ரயில் நிலையமும் அதன் எதிரே உள்ள அரசு பொதுமருத்துவமனை பேருந்து நிறுத்தமும் உள்ளது. சென்ட்ரலிலிருந்து பல்லவன் சாலை வரையிலும், அரசு பொதுமருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இருந்து ரிப்பன் மாளிகை வரையிலும் இருபுறமும் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக சென்ட் ரல் மேம்பாலத்தல் மட்டுமே சுமார் 20 நிமிடங்கள் காலதாமதம் ஏற்படுகின்றன. அவசரத்துக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. சிலர் விரைவு ரயில், மின்சார ரயில்களை நேரத்துக்கு பிடிக்க முடியாமல் தவறவிடுகின்றனர். இதனால் பொதுமக்களும், வெளி யூர் செல்பவர்களும் பெரிதும் அவதிபடுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிராட்வே செல்லும் மாநகர பேருந்துகளில் 40 சதவீத பேருந்துகள் பல்லவன் சாலையையொட்டி உள்ள அண்ணாசாலை வழியாக நேரடியாக இயக்கப்பட்டன. அதேபோன்று சில குறிப்பிட்ட பேருந்துகளை மட்டும் சென்ட்ரல் வழியாக இயக்காமல் நேராக பிராட்வே செல்வதுபோல் இயக்கினால் போக்குவரத்து நெரிசலை ஓரளவாவது குறைக்க முடியும். அதேசமயம் ஆட்டோ, கால்டாக்சிகளை சென்ட்ரல் மேம்பாலம் வழியாக இயக்காமல் மன்றோ சிலை வழியாக சென்ட்ரல் செல்ல மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்
மேலும் பாய் கடை பகுதியை (ஈவினிங் பஜார்) இருவழிப் பாதையாக மாற்றினால் பிராட்வே செல்லும் பேருந்து களையும், தனியார் வாகனங்களையும் மன்றோ சிலை, நர்சிங் கல்லூரி வழியாக சென்று வலதுபுறமாக (ஈவினிங் பஜார்) திரும்பி செல்லும் வகையில் பரீட்சார்த்த அடிப்படையில் போக்குவரத்தை மாற்ற வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் குறைவு, எரிபொருள் மிச்சம் செய்வதுடன், நேரத்தையும் சேமிக்க முடியும் என்று அவர்கள் கூறினர்.
இது குறித்து மாநகர போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தற்போது அண்ணாசாலை, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்தால் போக்குவரத்து சீராகிவிடும். மெட்ரோ பணிகள் முடிந்த பிறகும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், அண்ணாசாலை வழியாக பிராட்வேக்கு நேரடியாக பேருந்துகள் இயக்கு வது குறித்து பரிசீலிக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT