Published : 31 Jul 2023 05:49 PM
Last Updated : 31 Jul 2023 05:49 PM

“எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அமித் ஷா புகழாரம் சூட்டலாம். ஆனால்...” - ஜெயக்குமார் கருத்து

ஜெயக்குமார் | கோப்புப்படம்

சென்னை: "யாராக இருந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லித்தான் ஆக வேண்டும். அந்த அளவுக்கு அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் காலத்தால் அழிக்க முடியாத ஒரு நிலையில் இருக்கிறது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜக கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எம்ஜிஆர், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை மீண்டும் வருவதற்காகத்தான் அண்ணாமலை பாத யாத்திரை செல்கிறார் என்று பேசியது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். எங்களது தலைவர், தலைவி. காலத்தால் அனைவராலும் உச்சரிக்கப்படக் கூடிய, மாபெரும் தலைவர்கள். அந்தவகையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை குறிப்பிட்டு பேசியதை பாராட்ட வேண்டும். ஏனென்றால், யாராக இருந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லித்தான் ஆக வேண்டும். அந்தளவுக்கு அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் காலத்தால், அழிக்க முடியாத ஒரு நிலையில் இருக்கிறது. அதை நாங்கள் பெருமையாகத்தான் நினைக்கிறோம்.

ஆனால், அதேநேரத்தில் அந்தத் திட்டங்களை செயல்படுத்துகிற ஒரு அதிமுகவின் அரசாகத்தான் இருக்கும். வேறு யாராலும் அதை செய்ய முடியாது. எனவே, யார் வேண்டுமானாலும் எங்களது தலைவர்களின் புகழ் பாடிக் கொள்ளுங்கள். ஆனால், அவர்களது திட்டங்களை நாங்கள்தான் செயல்படுத்துவோம்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x