Published : 31 Jul 2023 04:14 PM
Last Updated : 31 Jul 2023 04:14 PM

TNMSC-ல் ஆக.31 வரை ரூ.170.82 கோடி மதிப்பிலான மருந்துகள் இருப்பு: இபிஎஸ்ஸுக்கு மா.சுப்பிரமணியன் பதில்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் (இடது), எடப்பாடி பழனிசாமி (வலது)

சென்னை: 2023 ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மருந்து கிடங்குகளில் மொத்தம் ரூ.170.82 கோடி மதிப்பிலான மருந்துகள் உள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிரிக்கட்சித் தலைவர் போல் செயல்படுகிறார். 07.05.2021 அன்று திமுக அரசு பதவியேற்கும்போது உச்சத்திலிருந்த கரோனா எனும் கொள்ளை நோயை விரட்டி அடித்து கரோனா எண்ணிக்கையை பூஜ்ஜியத்துக்கு கொண்டு வந்து சாதனை புரிந்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆட்சியின் மீது கொண்டுள்ள காழ்புணர்ச்சியின் காரணமாக பீதியை கிளப்பும் வகையில் மக்கள் விரோதப் போக்கை கையாளுகிறார், டெங்கு, மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டு மக்கள் அவதியுறுகிறார்கள் என்று கூறுகிறார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, 2019-ம் ஆண்டு மட்டும் டெங்கு பாதிப்பு 8,527 ஆக இருந்தது. அதேபோல் 2019-ம் ஆண்டு மலேரியாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,088, இந்த ஆண்டு மலேரியாவினால் 30.07.2023 வரை 164 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 2019-ம் ஆண்டு சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 681, இந்த ஆண்டு 30.07.2023 வரை 45 பேர் மட்டுமே சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, மக்களை காக்கும் பணியை செவ்வனே செய்து வரும் காரணத்தினால் தான் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா பாதிப்பு குறைந்து, கட்டுக்குள் இருக்கிறது.

அதிமுக ஆட்சிகாலத்தில் மருத்துவத் துறை எந்த ஒரு புதிய திட்டங்களையும் கொண்டு வராமல் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம், இதயம் காப்போம் திட்டம், சிறுநீரக பாதுகாப்பு திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் என பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, அதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் மருத்துவப் பயன் பெற்று வருகின்றனர்.

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் கடந்த 10 ஆண்டுகள் அதிமுக அரசு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதி அன்னவாசல் அரசு மருத்துவமனை வளாகத்தில் சரியாக பராமரிப்பின்றி அவதியுற்ற 50 மனநல பாதிக்கப்பட்ட சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களை காப்பாற்றுவதற்கு பழனிசாமியும் வழிகாட்டவில்லை, விஜயபாஸ்கரும் அவர் தொகுதியையே கடந்த 10 ஆண்டுகளாக பார்க்கவில்லை என்பதை தமிழக மக்கள் உணராமல் இல்லை.

தமிழக முதல்வரின் உத்தரவின்படி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் 7 முதல் 10 முறைக்கு மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்க்காத மருத்துவமனையில்லை, ஆய்வு செய்யாத ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை என்ற நிலையில் தமிழக மருத்துவத்துறையில் தன்னிறைவுப்பெற்ற மாநிலமாக திகழ்வதை பொறுத்து கொள்ள முடியாத பழனிசாமி வாய்புளித்தது மாங்காய் புளித்தது என்பது போல் மருந்து மாத்திரை பற்றாக்குறை என்று உளறுகிறார்.

இதே போல் 16.10.2022 அன்று சேலம் மாவட்டத்தில் மருந்துகள் பற்றாக்குறை என்று உளறினார். அவர் உளறிய சில மணி நேரங்களிலே அவர் ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள TNMSC மருந்து கிடங்கை முதல்வரின் உத்தரவின்படி ஆய்வு மேற்கொண்டு அனைத்து மருந்துகளும் இருப்பில் உள்ளதை நிரூபித்தோம், பத்திரிகையாளர் சந்திப்பிலும் தெரிவித்தோம். வேண்டுமென்றால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமியை வர சொல்லுங்கள், அவருடனே கூட்டு ஆய்வு மேற்கொள்வோம் என்று கூறியதற்கு பதில் சொல்லாத எதிர்கட்சித் தலைவர் சொந்த ஊரில் நடைபெற்றதை மறந்துவிட்டு மருந்துகள் இல்லை என்றும் TNMSC என்று ஒன்று உள்ளதோ என்று வினவுகிறார்.

தமிழக முதல்வர் நிதிநிலை அறிக்கையில் இதுவரை மருந்து கிடங்குகள் அமையப்பெறாத மாவட்டங்களான தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 5 இடங்களில் புதிய மருந்து கிடங்குகள் ரூ.30 கோடி செலவில் அமைக்கப்பெற்று பயன்பாட்டுக்கு வரும் தருவாயில் உள்ளது.

தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் உள்ள மருந்துகள் இருப்பு எண்ணிக்கை பற்றி உதாரணத்திற்கு சில கூறுகிறேன். காய்ச்சல் மேலாண்மை மருந்துகளை பொறுத்தவரை,

  • Paracetamol Tab 500 MG இருப்புகளின் எண்ணிக்கை 24.10 கோடி, 5.9 மாதங்களுக்குகான மருந்துகள் இருப்பில் உள்ளது.
  • Diclofenac Sodium Inj IP 25 MG இருப்புகளின் எண்ணிக்கை 24.48 இலட்சம், 4.6 மாதங்களுக்குகான மருந்துகள் இருப்பில் உள்ளது.
  • Paracetamol Tab 650 MG இருப்புகளின் எண்ணிக்கை 2.21 கோடி, 6.7 மாதங்களுக்கான மருந்துகள் இருப்பில் உள்ளது.

தொற்றா நோய்களுக்கான ஆன்டிபயாடிக் மருந்துகளை பொறுத்தவரை,

  • Metronidazole Tab IP 200 MG இருப்புகளின் எண்ணிக்கை 1.66 கோடி, 2.4 மாதங்களுக்குகான மருந்துகள் இருப்பில் உள்ளது.
  • Amoxycillin Cap IP 250 MG இருப்புகளின் எண்ணிக்கை 14.05 கோடி, 5.8 மாதங்களுக்குகான மருந்துகள் இருப்பில் உள்ளது.
  • Doxycycline CAP IP 100 MG இருப்புகளின் எண்ணிக்கை 2.24 கோடி, 6.8 மாதங்களுக்குகான மருந்துகள் இருப்பில் உள்ளது.
  • Erythromycin Stearate TAB IP 250 MG இருப்புகளின் எண்ணிக்கை 58.29 இலட்சம், 4.8 மாதங்களுக்குகான மருந்துகள் இருப்பில் உள்ளது.

ஆக 31.07.2023 வரை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மருந்து கிடங்குகளில் உள்ள மருந்துகளின் மொத்த மதிப்பு ரூ.170.82 கோடி (ரூ.170,82,98,756) ஆகும். இது பற்றியெல்லாம் அறியாது TNMSC என்று உள்ளதா என்று கேட்பதற்கு காரணம் அரசியல், தேர்தல் தோல்வி பயமாகும். தமிழக முதல்வரின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மக்களை கேடயமாக இருந்து காக்கும் என்பதில் எள்ளளவும் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு ஐயம் தேவையில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கடந்த இரண்டு ஆண்டு கால திமுக அரசின் அலங்கோல நிர்வாகத்தாலும், சுகாதாரத் துறையின் அலட்சியப் போக்காலும் அரசு மருத்துவமனைகளையே நம்பி இருக்கும் பாமர மக்கள் முறையான சிகிச்சை இல்லாமல், மருந்து மாத்திரைகள் கிடைக்காமல் தங்கள் உயிரைக் காக்க போராடும் அவலம் ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதுமான மருந்துகள் வழங்கப்படுவதில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட TamilNadu Medical Services Corporation Ltd (TNMSC) என்று அழைக்கப்படும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் 3 முதல் 6 மாதங்களுக்குத் தேவைப்படும் மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மொத்தமாக வாங்கி, மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு தாமதமின்றி நேரடியாக வழங்கும் இந்நிறுவனம் இப்போது இருக்கிறதா என்பதே தெரியவில்லை.

அனைத்து பெரிய மருத்துவமனைகளிலும் லோக்கல் கொள்முதல் என்று அனைத்து மருந்துகளும் அதிக விலைக்கு உள்ளூரிலேயே வாங்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x