Published : 31 Jul 2023 07:19 AM
Last Updated : 31 Jul 2023 07:19 AM

அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், டிசிசி பணிக்கு தமிழ் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - தேர்வு நடைமுறை வெளியீடு

சென்னை: அரசுப் பேருந்து ஓட்டுநர், டிசிசி பணியாளர்களுக்கான தேர்வு நடை முறை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கு, போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், ஓட்டுநர்-நடத்துநர் பணிகளை ஒருசேர மேற்கொள்ளும் டிசிசி பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பணியாளர் தேர்வில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செய்முறை தேர்வு, நேர்காணலில் மட்டும் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவர முடியாது என்பதால் எழுத்துத் தேர்வும் நடத்த பரிந் துரைக்கப்பட்டுள்ளது.

எழுத்து தேர்வைப் பொறுத்தவரை, தேர்வு நடத்தும் கல்வி நிறுவனத்தை ஆலோசித்து இறுதிசெய்ய வேண்டும். அந்நிறுவனத்திடம் பொது அறிவு, போக்குவரத்து விதிகள், மெக்கானிக் பிரிவு, வாகனம் ஓட்டும் திறன் ஆகியவை குறித்த பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் குறித்து சாலை போக்குவரத்து நிறுவன இயக்குநர் தெரிவிக்க வேண்டும்.

அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என மனிதவள மேலாண் துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்ப தேர்வு மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பொதுத் தமிழ் (கொள்குறி வினா) தேர்வுக்கு 50 மதிப்பெண், பொது அறிவு தேர்வுக்கு 20 மதிப்பெண், போக்குவரத்து விதி, சமிக்கை, மெக்கானிக்ஸ் தேர்வுக்கு 30 மதிப்பெண், ஓட்டுநர் திறன் தேர்வுக்கு (செய்முறை) 80 மதிப்பெண், நேர்காணலுக்கு 20 மதிப்பெண் என்ற அளவில் தேர்வு நடைபெறும்.

குறைந்தபட்சம் 40 சதவீதம்: இதில் பொதுத் தமிழ்த் தேர்வில் 40 சதவீத மதிப்பெண் பெற்றால் மட்டுமே தேர்ச்சி என கருதப்பட்டு, இதர தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும். அதேநேரம், மொத்த மதிப்பெண்ணில் தமிழ்த் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. 150 மதிப்பெண்ணுக்கு தேர்வர் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். இந்தத் தேர்வுப் பணிகளை மேற்கொள்ள 3 குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் ஓட்டுநர்திறன், நேர்காணல், நியமனம் ஆகிய பணிகளை மேற்கொள்வர்.

ஒரு காலிப்பணியிடத்துக்கு 4 பேர் வீதம் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,180 எனவும், பட்டியலின, பழங்குடியினருக்கு ரூ.590 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 24 வயது, பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 40 வயது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினருக்கு அதிகபட்சமாக 45 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நியமனப் பணிகளைமேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x