Published : 31 Jul 2023 07:33 AM
Last Updated : 31 Jul 2023 07:33 AM

பேராசிரியர் நன்னனின் புத்தகங்கள் நாட்டுடமை - நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். உடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பேராசிரியர் மா.நன்னனின் மனைவி பார்வதி அம்மையார் உள்ளிட்டோர்.

சென்னை: தமிழக அரசின் சார்பில் பேராசிரியர் நன்னனுக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவரது புத்தகங்கள் நாட்டுடமையாக்கப்படும் என்று நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவி்ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவி்ல், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: புலவர் நன்னன், அகமும் புறமும் அப்பழுக்கற்றவராக, நேர்மையானவராக விளங்கியவர். வாழ்நாள் எல்லாம் மொழிக்காக, நாட்டுக்காக உழைத்துக் கொண்டிருப்பதுதான் முக்கியமானது. இது எல்லோராலும் முடியாது. நன்னன் எழுதிக்கொண்டே இருந்தார். என்னோடு அவர் வாரத்துக்கு 2 முறையாவது தொடர்பு கொள்வார். அப்போதெல்லாம் அறிக்கை, பேச்சை படித்தேன் நன்றாக இருந்தது என்று கூறிவிட்டு அறிவுரையும் வழங்கி வந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பரில் அறிவாலயம் வந்த நன்னன், எல்லோரையும் பார்க்க வந்ததாக கூறினார். நவ.7-ம் தேதி மறைந்தார். அவர் மறைந்த பின்னரும் அவரது புத்தகங்கள் வெளிவருகின்றன. எழுத்தால், சிந்தனையால், செயலால் நன்னன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்; வாழ்வார்.

அவர் 124 புத்தகங்களை உருவாக்கிச் சென்றுள்ளார். இவற்றை நன்னன் குடி அமைப்பு வெளியிட்டுள்ளது. நன்னன் பேச்சு, திராவிட இயக்க வகுப்பு எடுப்பது போல் இருக்கும். நூறாண்டு வரலாற்றை 10 நிமிடங்களில் பேசும்ஆற்றல் அவருக்கு உண்டு.

கருணாநிதியின் வழித்தோன்றல்களாக நாம் உள்ளோம். நான் மட்டுமல்ல; திராவிட இயக்கத்தினர் கருணாநிதியின் வழித்தோன்றல்கள்தான். வழித்தோன்றல்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள்.

தொலைக்காட்சியில் தமிழ் வகுப்பு: தனக்கென ஒரு எழுத்து, பேச்சு நடையை நன்னன் வைத்திருந்தார். சென்னை தொலைக்காட்சியில் அவரது தமிழ் வகுப்பு 17 ஆண்டு நடைபெற்றன. தமிழகத்துக்கு பெரியார் போல மற்ற மாநிலங்களில் இல்லை. எங்களுக்கு ஒரு பெரியார் இல்லையே என்ற ஏக்கம்மற்ற மாநிலத்தவருக்கு வந்துள்ளது.

சனாதனம், வர்ணாசிரமம் குறித்து நம் மாநில ஆளுநர் தினசரி வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். அவர் பேசுவதே நமக்கொரு பிரச்சாரமாக அமைந்து வருகிறது. தொடர்ந்து அவரே இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் நம் கொள்கையை வளர்க்க முடியும். நம் பிரச்சாரத்தை நாமும் சிறப்பாக செய்ய முடியும். தினசரி தவறான பாடங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் பேசி வருவதே நம் கொள்கைக்கு மிகப்பெரிய விளம்பரத்தை கொடுத்து வருகிறது. நம் எதிரிகளுக்குப் பதில் சொல்ல நன்னன் வரிகள் அதிகமாக நமக்குப் பயன்படும்.

வாழ்நாள் எல்லாம் கொள்கை அடையாளமாக வாழ்ந்தவர் நன்னன். நன்னன் நூற்றாண்டை கொண்டாடும் இந்த நேரத்தில் தமிழக முதல்வராக நான் இருப்பதால், தமிழக அரசின் சார்பில் நன்னனுக்கு புகழ் சேர்க்கும் வகையில் நன்னனின் புத்தகங்கள் நாட்டுடமையாக்கப்படும்.

கோரிக்கை வைக்கவில்லை: நன்னன் குடும்பத்தினர், உறவினர்கள் யாரும் இந்த கோரிக்கையை என்னிடம் வைக்கவில்லை. யாரும் கோராமல் நன்னன் குடியில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில் செய்துள்ளேன். நன்னன் காலம் தொடர்ந்து வருகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

இவ்விழாவுக்கு திராவிடர் கழகதலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நன்னனின் மனைவி பார்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x