Published : 31 Jul 2023 07:38 AM
Last Updated : 31 Jul 2023 07:38 AM

விடுபட்டுள்ள 72 சதவீத பணியாளர்கள் ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் விடுபட்டுள்ள 72 சதவீத சுகாதாரத்துறை பணியாளர்கள் விரைவாக ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

உலக அளவில் ஹெபடைடிஸ்-பி வகை கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் அந்நோயை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தேசிய ஹெபடைடிஸ்-பி ஒழிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் அத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களை பூரணமாக குணப்படுத்தும் நோக்கில் 42 சிகிச்சை மையங்களும், சிறப்பு மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மருத்துவப் பணியாளர்களுக்கு மூன்று தவணை ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. அதற்கு மருத்துவப் பணியாளர்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை.

இதையடுத்து அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. ஆனாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் எண்ணிக்கை உயரவில்லை. எனவே விரைவில் அனைவரும் ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கடந்த ஆண்டு செப்.7-ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அலுவல் கூட்டத்தில் மருத்துவப் பணியாளர்களுக்கு கல்லீரல் அழற்சி தடுப்பூசி செலுத்துவதற்கான நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அந்த வழிகாட்டுதல்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், 28 சதவீதம் பேர் மட்டுமே முறையாக ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். விடுபட்ட அனைவருக்கும் உடனே தடுப்பூசி செலுத்தி, அதுகுறித்த தகவல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்துக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x