Published : 31 Jul 2023 08:10 AM
Last Updated : 31 Jul 2023 08:10 AM
தருமபுரி/மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதையடுத்து அருவியில் குளிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்தது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.
விநாடிக்கு 20 ஆயிரத்தைக் கடந்த நீர்வரத்து பின்னர் குறையத் தொடங்கியுள்ளது. நேற்று காலை முதல் நீர்வரத்து மேலும் குறையத் தொடங்கியது. நேற்று காலை 8 மணியளவில் 15 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் வரத்து, மாலை 6.30 மணி நிலவரப்படி விநாடிக்கு 8,000 கனஅடியாக சரிந்தது.
வெள்ள அபாயம் குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நேற்று பிற்பகல் முதல் விலக்கப்பட்டது. இதனால் சுற்றுலா வந்த பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். எனினும், பரிசல் பயணத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.
மேட்டூரில் சரிவு: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 13,839 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 13,104 கனஅடியாக குறைந்தது. நேற்று மாலை நீர்வரத்து விநாடிக்கு 11,342 கனஅடியாக மேலும் சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நேற்று மாலை முதல் விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி வெளியேற்றப்படு கிறது. அணையின் நீர்மட்டம் 65.60 அடியாகவும், நீர் இருப்பு 29.03 டிஎம்சியாகவும் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT