Published : 31 Jul 2023 08:13 AM
Last Updated : 31 Jul 2023 08:13 AM
கோவை: ஆவின் பெயரில் செயல்படும் பாலகங்களில் ஆவின் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடான கடைகள் அகற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆவின் மற்றும் தமிழ்நாடு அரசு என்ற பெயரில் அனுமதியின்றி நூற்றுக்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் செயல்பட்டு வந்தன. ஆவின் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் திறக்கப்பட்ட பாலகங்களில் பஜ்ஜி, டீ, காபி, இட்லி, தோசை என பல்வேறு உணவு பொருட்கள் விதிமீறி விற்பனை செய்யப்பட்டு வந்தன.
தற்போதும் பல கடைகள் செயல்பட்டு வருகின்றன. முறைகேடுகள் அதிகரித்த காரணத்தால் கடைகளுக்கான உரிமங்களை நீட்டிக்க ஆவின் நிர்வாகம் மறுத்ததுடன் புதிதாக கடைகள் செயல்படவும் அனுமதி வழங்குவதை நிறுத்தியுள்ளது. ஆவின் கடைகள் என்ற பெயரில் விதிமீறி செயல்படும் கட்டமைப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகத்திடம் ஆவின் நிர்வாகம் புகார் அளித்துள்ளது.
விதிமீறல்கள் தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் விரிவான செய்தி படங்களுடன் வெளியிடப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டுவரும் ஆவின் கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆவின் பாலகங்களை முற்றிலும் மறுசீரமைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: ஆவின் பாலகங்களில் ஆவின் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், கடைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி காலாவதியானது, மாநகராட்சி சார்பில் தடையின்மை சான்று பெறாதது என பல பிரச்சினைகள் உள்ளன.
இது குறித்து ஆவின் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதன் காரணமாக ஆவின் பாலகங்கள் கட்டமைப்பை முற்றிலும் மறுசீரமைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு ஒரு மாத கால அவகாசத்தை மாவட்ட நிர்வாகத்திடம், ஆவின் நிர்வாகம் கோரியுள்ளது. தற்போது முறைகேடாக செயல்படும் கடைகள் அனைத்தும் அகற்றப்படுவதுடன் எதிர்வரும் காலங்களில் ஆவின் என்ற பெயரில் செயல்படும் கடைகளில் ஆவின் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் முறைகேடாக செயல்பட்டு வந்த ஆவின் கடைகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. இருப்பினும் ராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் ஆவின் கடைகளில் தற்போதும் பல்வேறு உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அனைத்து கடைகளும் அகற்றப்பட வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT