Published : 31 Jul 2023 04:03 AM
Last Updated : 31 Jul 2023 04:03 AM
கிருஷ்ணகிரி: அனுமதியின்றி வெடி பொருட்களைப் பதுக்கியதே கிருஷ்ணகிரியில் பட்டாசு கிடங்கில் வெடி விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் ரவி (46) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கில் நேற்று முன்தினம் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ரவி உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். 6 கடைகள் தரைமட்டமாகின. இச்சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
குடியிருப்பு பகுதியில் பட்டாசுக் கடைக்கு உரிமை வழங்கியது. பட்டாசுக் கடையில் இருப்பு விவரங்களை ஆய்வு செய்வதில் ஏற்பட்ட குறைபாடுகள் என பல்வேறு சந்தேகங்கள் விபத்து தொடர்பாக எழுந்து வருகிறது. இந்நிலையில், அனுமதியின்றி வெடி பொருட்களை இருப்பு வைத்ததே விபத்துக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள சிலர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசு தயாரிக்க யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை. சிவகாசியிலிருந்து கொள்முதல் செய்யப்படும் பட்டாசுகளை வாங்கி சில்லறை விற்பனை செய்ய மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதுவும் 100 கிலோ வரை கம்பி மாத்தப்பூ, பேன்சி ரக பட்டாசுகள்,
500 கிலோ வெடிக்கும் பட்டாசுகளை இருப்பு வைத்து சில்லறை விற்பனை செய்யவே உரிமம் வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் கடையில் உள்ள பட்டாசுகளின் இருப்பு, விற்பனை, கொள்முதல் விவரங்களைத் தொடர்புடைய காவல் நிலையத்தில் வியாபாரிகள் தெரிவிக்க வேண்டும். இதை 3 மாதங்களுக்கு ஒரு முறை போலீஸார் நேரில் ஆய்வு செய்து, பராமரிப்பு பதிவேடுகளில் கையெழுத்திட வேண்டும்.
ஆனால், விபத்து நடந்த கிடங்கில் அனுமதியின்றி திருவிழா மற்றும் இறந்தவர்களின் இறுதி ஊர்வலத்தில் பயன்படுத்தப்படும் நாட்டு வெடி குண்டுகள், பகலில் உயரச் சென்று வெடிக்கும் வெடிகளைத் தயாரித்து, விற்பனை செய்துள்ளனர். இதற்காகப் பட்டாசு தயாரிக்க வெடி மருந்துகள் பதுக்கி வைத்திருக்கக் கூடும்.
ஏற்கெனவே சாமல்பட்டி, ஓசூர் பட்டாசுக் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, உயிர்ச் சேதங்கள், கட்டிடங்கள் சேதம் ஏற்படவில்லை. ஆனால் இந்த விபத்தில் கட்டிடங்கள், வாகனங்கள், மனித உடல்கள் சிதறி உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறியதாவது: கிருஷ்ணகிரியில் வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகளில் செயல்படும் பட்டாசுக் கடைகளில், பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். விபத்து நடந்த கடையில் அனுமதியின்றி வெடி பொருட்கள் இருப்பு வைத்ததே விபத்துக்குக் காரணம். இவ்வாறு இருப்பு வைக்கும் கடைகளின் அனுமதி ரத்து செய்து, வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து தொடர்புடைய அலுவலர்கள் சிலரிடம் கேட்டபோது, “விபத்து நடந்த கிடங்கில் சில்லறை விற்பனைக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதுவும் உரிய ஆவணங்களைச் சரிபார்த்து, இடத்தை நேரில் ஆய்வு செய்தே பின்னரே அனுமதியளிக் கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நேரடியாக ஆய்வு செய்து உரிமம் புதுப்பிக்கப்படுகிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT