Published : 26 Nov 2017 10:49 AM
Last Updated : 26 Nov 2017 10:49 AM
மதுரையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்ற விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்காததால் இரு அணிகளுக்கு இடையே கோஷ்டி பூசல் பூதாகரமாகி இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மதுரை அருகே உள்ள தோப்பூரில் நூறு அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாடு செய்திருந்தார். 10 ஆயிரம் பேருக்கு அசைவ, சைவ சாப்பாடு வழங்கப்பட்டது.
விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாவட்ட அதிமுகவினர் வைத்திருந்த வரவேற்பு பேனர்களில் முதல்வர் பழனிசாமிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்தனர். இதனால் இந்த விழாவை அவரது ஆதரவாளர்கள் அடியோடு புறக்கணித்தனர்.
முதல்வர் கே.பழனிசாமி திறக்க இருந்த கல்வெட்டில் ஆரம்பத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் பொறிக்கப்படவில்லை. கடைசி நேரத்தில் முதல்வர் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வம் பெயர் தனியாகப் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டு விழா கல்வெட்டில் இணைத்து ஒட்டப்பட்டது. எனினும் விழாவில் பங்கேற்க ஓபிஎஸ் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு வந்த முதல்வர் பழனிசாமி கல்வெட்டை திறந்து வைத்தார்.
இந்த விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்பி, எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுக்கு முறை யாக அழைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், இந்த விழா நடந்த நேரத்தில் மதுரையில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. அவரது ஆதரவு எம்பி கோபாலகிருஷ்ணன் (மதுரை), எம்எல்ஏக்கள் மாணிக்கம் (சோழவந்தான்), சரவணன் (மதுரை தெற்கு) மற்றும் நிர்வாகிகள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
பழனிசாமி, பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தாலும் மாநில, மாவட்ட அளவில் இருதரப்பு நிர்வாகிகளும், எம்பி, எம்எல்ஏக்களும் தனித்தனியே செயல்படுகின்றனர். மாவட்ட அளவில் நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களில் கூட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என அவர்கள் ஆதங்கப்படுகின்றனர். இது குறித்து அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் வருத்தப்பட்டுள்ளனர்.
பன்னீர்செல்வம் ஆதரவு எம்பி மைத்ரேயன் சில நாட்களுக்கு முன் தன்னுடைய முகநூல் பக்கத்தில், ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்? என்று கேள்விகேட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அவரது இந்த கருத்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. உடனே மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, அதிமுகவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, மைத்ரேயன் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என பதில் அளித்தார். அதற்கும் பதிலளித்த மைத்ரேயன், நான் கூறியது சொந்த கருத்து அல்ல, தொண்டர்களின் உணர்வு என பதிவிட்டார்.
அதனால் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியிலும், ஆட்சியிலும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுவதாகக் கூறினாலும் கோஷ்டி பூசல் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துள்ளது.
ஓபிஎஸ் புறக்கணிப்பு ஏன்?
கொடி கம்பம் கல்வெட்டில் தனது பெயர் பொறிக்கப்படாதது ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும், விழாவுக்கு தனது ஆதரவாளர்களை சரியாக அழைக்காததால் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இருந்தும் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து மதுரை எம்பி கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘அது என்ன விழா, எனக்கு தெரியவில்லை, என்னை யாரும் அழைக்கவும் இல்லை, நேற்று இரவே (நேற்று முன்தினம்) டெல்லிக்கு வந்துவிட்டேன். விழா நடந்த இடமான தோப்பூர் மதுரை மாவட்டமாக இருந்தாலும், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டது. அதனால், என்னை அழைக்காமல் இருந்திருக்கலாம்’’ என்றார்.
மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணனிடம் கேட்டபோது, என்னை யாரும் அந்த விழாவுக்கு அழைக்கவில்லை. துணை முதல்வருடன் இருப்பதால் அந்த விழாவுக்கு நான் செல்லவில்லை என்றார்.
சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கத்திடம் கேட்டபோது, துணை முதல்வருடன் கோயிலுக்குச் சென்றுவிட்டேன். ஆனால், என்னை விழாவுக்கு அழைத்தார்கள் என்று பட்டும் படாமலும் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT