Published : 30 Jul 2023 10:26 PM
Last Updated : 30 Jul 2023 10:26 PM

சனாதனம் குறித்து ஆளுநர் பேசுவது நமக்கு ஒரு பிரச்சாரமாக அமைந்திருக்கிறது: நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின்

நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை | படம்: ட்விட்டர்

சென்னை: சென்னை - சர்.பிட்டி தியாகராயர் கலை மன்றத்தில் நடைபெற்ற பேராசிரியர் மா.நன்னன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய சிறப்புரையில் தெரிவித்தது.

மதிப்பிற்குரிய பேராசிரியர் மா.நன்னன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சிக்கு தலைமையேற்று எழுச்சியுரை ஆற்றி அமர்ந்திருக்கக்கூடிய திராவிடர் கழகத்தினுடைய தலைவர், தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களே, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை வேலு அவர்களே, ஜெ. கருணாநிதி அவர்களே, திராவிட இயக்கத்தினுடைய எழுத்தாளர் பெருமதிப்பிற்குரிய திருநாவுக்கரசு அவர்களே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்திருக்கக்கூடிய என்னுடைய மதிப்பிற்குரிய இயக்குநர் அமிர்தம் அவர்களே, துணை மேயர் மகேஷ்குமார் அவர்களே, ஆய்வரங்க நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றயிருக்கக்கூடிய மானமிகு வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே, மானமிகு கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களே, புலவர் நன்னன் அவர்களுடைய அருமைமிகு துணைவியார் பார்வதி அம்மையார் அவர்களே மற்றும் அவருடைய குடும்பத்தை சார்ந்திருக்கக் கூடியவர்களே, வருகை தந்துள்ள மாணவச் செல்வங்களே, பெற்றோர்களே, தாய்மார்களே, நன்னன் குடி சொந்தங்களே, பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய சகோதரர்களே, என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும், உயிரான அன்பு உடன்பிறப்புக்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

பேராசிரியர் நன்னன் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய பெருமையாக நான் கருதுகிறேன்.

நீதிக்கட்சியினுடைய அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய வெள்ளுடை வேந்தர் தியாகராயருடைய பெயரில் அமைந்துள்ள இந்த தியாகராய நகரில், இந்த சர்.பிட்டி தியாகராயர் கலை மன்றத்தில் இந்த விழா நடைபெறுகிறது.

திராவிடர் கழகத்தின் தலைவரான மானமிகு ஆசிரியர் அவர்கள் இந்த மேடையில் இருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவராக நானும் பங்கெடுத்திருக்கிறேன்.

நீதிக்கட்சியில் நுழைந்து, திராவிடர் கழகத்தில் செயல்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் மிகத்தீவிரமாக இயங்கியவர் நன்னன் என்பதன் அடையாளமாகவே இந்த நிகழ்ச்சி பொருத்தமாக அமைந்திருக்கிறது.

பேராசிரியர் நன்னன் அவர்களுடைய நூற்றாண்டு விழாவை, புத்தக வெளியீட்டு விழா, மாணவச் செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஆகியவற்றோடு இணைத்து ஏற்பாடு செய்துள்ள நன்னன் குடி அமைப்புக்கு என்னுடைய வாழ்த்துகளை, நன்றியை நான் முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலுக்கு “அகமும் புறமும்” என்று தலைப்பு வைத்து முன்பு வெளியிட்டேன்.

புலவர் நன்னன் அவர்கள் அகமும் புறமும் அப்பழுக்கற்றவராக, நேர்மையானவராக விளங்கியவர். அத்தகைய பெருமகனாருக்கு நூற்றாண்டு நிறைவு விழாவை நாம் கொண்டாடி கொண்டிருக்கிறோம்.

தந்தை பெரியார், தலைவர் கலைஞரை போல புலவர் நன்னன் அவர்களும் 90 ஆண்டுகளை கடந்து வாழ்ந்தவர். இனப்பற்றும், மொழிப்பற்றும் இருந்த காரணத்தால்தான் இத்தனை ஆண்டுகள் பாடுபடுவதற்காக வாழ்நாளை நீட்டித்து வைக்கிறது.

வாழ்நாளெல்லாம் நாட்டுக்காக, மொழிக்காக ஓயாது உழைத்துக் கொண்டிருப்பதுதான் முக்கியமானது. அது எல்லோராலும் முடியாது. தந்தை பெரியாரைப் போல, கலைஞரைப் போல, நன்னனைப் போல ஒரு சிலரால் தான் முடியும். இறுதி வரைக்கும் உழைத்தவர்கள் இவர்கள். இவர்களால் சும்மா இருக்கமுடியாது. இவர்கள் மட்டுமல்ல, இவர்களுக்கு பக்கத்தில் இருப்பவர்களையும் சும்மா விடமாட்டார்கள்.

நன்னன் அவர்கள் எழுதிக் கொண்டே இருந்தார்கள். எனக்கு என்ன பெருமை என்று சொன்னால், பல்லாயிரம் பக்கங்களை எழுதிக் குவித்திருக்கக்கூடிய புலவர் நன்னன் அவர்களது விரலுக்கு, விழுப்புரத்தில் நடைபெற்ற இளைஞரணி பாசறை கூட்டத்தில் மோதிரம் அணிவித்தவன் நான். அதனை இன்றைக்கும் நினைத்து பெருமையாக கருதிக் கொண்டிருக்கிறேன். அவரை பொறுத்தவரைக்கும், என்னோடு வாரத்திற்கு இரண்டு முறையாவது தொலைபேசியில் தொடர்பு கொள்வதுண்டு. அப்படி தொடர்பு கொள்கிறபோதெல்லாம் உங்கள் அறிக்கையை பார்த்தேன். உங்கள் பேச்சை படித்துப் பார்த்தேன். நன்றாக இருந்தது. அதைதாண்டி, எனக்கு அறிவுரையும் பல நேரங்களில் அவர் சொல்லியிருக்கிறார்.

திடீரென்று ஒரு வாரம் அவரிடத்திலிருந்து எனக்கு ஃபோன் வரவில்லை. நானே நினைத்துக் கொண்டேன். உடல் நிலை சரியில்லை போலிருக்கிறது என்று கருதி உடனே அவரை நேரடியாக சென்று பார்த்து விசாரித்தேன். ஆமாம் என்று சொன்னார்கள். அதனால்தான் உன்னை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று வருத்தத்தோடு சொன்னார். அப்போதும் எனக்கு உற்சாகத்தை வழங்கினார். அப்போது அந்த நேரத்தில் முரசொலி பொங்கல் மலர் வெளியீடு நடந்தது. அந்த மலரை கொண்டு சென்று அவரிடத்தில் கொடுத்தேன். அவர் திருப்பி எனக்கு பெரியார் கணினி புத்தகத்தை கொடுத்தார்.

திடீரென்று ஒருநாள் 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு நாள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கின்ற நேரத்தில் அறிவாலயத்திற்கு வந்தார். அனைவரையும் பார்த்துவிட்டு போகவேண்டும், உற்சாகப்படுத்தி விட்டுப் போகவேண்டும் என்பதற்காகதான் வந்தேன் என்று சொல்லிவிட்டு சென்றார்.

நவம்பர் மாதம் 7ம் நாள் நன்னன் அவர்கள் மறைந்தார்கள். மறைந்தார் என்று சொல்ல முடியாது. அவர் மறைந்த பிறகும், புத்தகங்கள் அவர் பெயரால் வெளிவந்து கொண்டிருக்கிறது என்றால், எழுத்தால், சிந்தனையால், செயலால் நன்னன் அவர்கள் வாழ்கிறார். தொடர்ந்து அவர் வாழ்வார்.

ஒன்றல்ல இரண்டல்ல, 124 புத்தகங்களை நமக்காக உருவாக்கிக் கொடுத்துச் சென்றிருக்கிறார் நன்னன் அவர்கள். இந்த நூல்களை நன்னன் குடி அமைப்பு வெளியிட்டுள்ளது. நன்னன் குடி என்றால் அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல, நாம் அனைவரும் நன்னன் குடியைச் சேர்ந்தவர்கள் தான்.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுக்குழு நடந்தால், செயற்குழு நடந்தால் முதல் வரிசையில் வந்து உட்கார்ந்திருப்பார். முக்கியமான புத்தக வெளியீட்டு விழா என்று சொன்னால், தலைவர் கலைஞர் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்று சொன்னால், அந்த நிகழ்ச்சிக்கு வந்து கலந்து கொண்டு சிறப்பிப்பார். அந்த மேடைகளில் பங்கேற்று பேசியும் இருக்கிறார். எவ்வளவு நேரம் பேசினாலும், நன்னன் அவர்களது உரையை உற்றுக் கவனிப்பார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். கழகத்தின் முப்பெரும் விழா நடக்கின்றபோதெல்லாம், பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து அதை நடத்திக் காட்டியிருக்கிறார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா நடந்தது. தலைவர் கலைஞர் அவர்களோடு, இனமானப் பேராசிரியர் அவர்களும், நம்முடைய ஆசிரியர் அவர்களும் கலந்து கொண்டார்கள். நான் அந்த நிகழ்ச்சிக்கு வரவேற்புரை ஆற்றினேன். நம்முடைய நன்னன் அவர்களும் அதில் பங்கெடுத்து சிறப்பான உரையை ஆற்றினார்கள்.

கலைஞர் அவர்கள் எப்படி கடைசி காலத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்டு, உட்கார்ந்து பேசுவாரோ, அதேபோல, நன்னன் அவர்களும் உட்கார்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசினார். அவரது பேச்சு என்பது திராவிட இயக்க வகுப்பு நடத்துவதுபோல இருக்கும்.

100 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தோம்? இப்போது நிலைமை எப்படி மாறி இருக்கிறது என்பதை விளக்கிச் சொன்னார் நன்னன் அவர்கள். அந்த

100 ஆண்டு வரலாற்றை 10 நிமிடத்தில் அனைவருடைய மனக்கண் முன்னால் நிறுத்தி பேசக்கூடிய ஆற்றல் அவருக்குதான் உண்டு. இதுதான் அவரது பாணி.

அந்த விழாவில் தான் தலைவர் கலைஞர் அவர்கள் பேசும் போது குறிப்பிட்டார்கள். ''13 வயதில் தமிழ்க் கொடி ஏந்திப் போராடியவன் இந்தக் கருணாநிதி, இன்றைக்கும், அந்தக் கருணாநிதியினுடைய பரம்பரை, கருணாநிதியுனுடைய வழித்தோன்றல்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் இருக்கிற காரணத்தால் ஒரு கருணாநிதி போனாலும், பல கருணாநிதிகள் நிச்சயமாக உங்களுக்காக உழைக்க வந்து கொண்டே இருப்பார்கள்" என்று பேசினார்.

அத்தகைய கலைஞரின் பரம்பரையினராக, வழித்தோன்றல்களாக நாம் இன்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். கலைஞரின் வாரிசு என்றால் நான் மட்டுமல்ல, திராவிடக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய அனைவரும் கலைஞரின் வழித்தோன்றல்கள் தான்.

இந்த வழித் தோன்றல்கள்தான் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். அடக்குமுறைக்கு வழித்தோன்றல்கள் இருப்பதைப் போல, விடுதலை இயக்கத்துக்கும் வழித்தோன்றல்கள் எப்போதும் இருப்பார்கள். தனக்கென ஒரு எழுத்து நடையை, பேச்சு நடையை நன்னன் அவர்கள் வைத்திருந்தார்கள்.

பிழையின்றி எப்படி எழுத வேண்டும், பிழையின்றி எப்படி பேச வேண்டும் என்பதை கற்பிக்கும் மிகப் பெரிய ஆசானாக அவர் விளங்கினார். சென்னை தொலைக்காட்சியில் அவரது தமிழ் வகுப்புகள் 17 ஆண்டுகள் வந்துள்ளது. எந்த ஒரு தமிழாசிரியரும், தமிழ்ப் பேராசிரியரும் அடைய முடியாத பெருமை இது.

தனக்கு முன்னால் மாணவர்கள் உட்கார்ந்து கேட்பதாக நினைத்துக் கொண்டு அவர் எடுத்த வகுப்பு உண்மையில் ஆச்சரியமானது, அசத்தலானது. திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய தனது முப்பெரும் விழாவில் நன்னன் அவர்களுக்கு தந்தை பெரியார் விருது வழங்கியது.

பெரியாரைப் பேசாத நாளெல்லாம், பிறவாத நாள் என வாழ்ந்த தமிழ்ப் பெரியார் தான் நம்முடைய நன்னன் அவர்கள். இந்தியாவையே கபளீகரம் செய்ய சனாதன, வர்ணாசிரம சக்திகள் துடித்துக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் தந்தை பெரியாரின் எழுத்துக்களை 21 மொழிகளில் கொண்டு வர நாம் முன்னெடுப்புகளைச் செய்து கொண்டு வருகிறோம்.

தமிழ்நாட்டுக்கு ஒரு பெரியார் இருந்ததைப் போல, மற்ற மாநிலங்களுக்கு இல்லை. எங்களுக்கு ஒரு தந்தை பெரியார் இல்லையே, திராவிட இயக்கம் இல்லையே என்ற ஏக்கம் இன்றைக்கு மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் வந்திருக்கிறது.

சனாதனம், வர்ணாசிரமம் குறித்து நம்முடைய ஆளுநர் தினந்தோறும் பேசிக் கொண்டிருக்கிறார் அல்லவா? அவர் பேசுவது நமக்கு ஒரு பிரச்சாரமாக அமைந்திருக்கிறது. அது வேறு. நான் பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். தொடர்ந்து அவரே இருக்கவேண்டும், இருந்தால்தான் நம்முடைய கொள்கைகளை நாம் வளர்க்கமுடியும். நம்முடைய பிரச்சாரத்தை நாம் சிறப்பாக செய்யமுடியும். தினந்தோறும் தவறான பாடங்களை நடத்திக் கொண்டு இருக்கிறார். அவர் பேசி வருவதே நமது கொள்கைகளுக்கு மிகப்பெரிய விளம்பரத்தைக் கொடுத்து வருகிறது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள், 'வாழ்க வசவாளர்கள்' என்று அதைதான் இப்போது நான் சொல்ல வேண்டி இருக்கிறது. 'எனது எதிரிகள்தான் என்னை உற்சாகமாக வைத்திருக்கிறார்கள்' என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். அத்தகைய எதிரிகளுக்கு பதில் சொல்வதற்கு நன்னன் அவர்களின் எழுத்துகள் அதிகமாக நமக்கு பயன்படும்.

எப்படி எழுத வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை மட்டுமல்ல, எப்படி வாழ வேண்டும் என்றும் கற்று கொடுத்தார் நம்முடைய நன்னன் அவர்கள். வாழ் நாளெல்லாம் கொள்கைக்காக வாழ்ந்தார். கொள்கையின் அடையாளமாகவே வாழ்ந்தார். தனது குடும்பத்தையையும், கொள்கையையும் இணைத்துக் கொண்டு வாழ்ந்தார்.

மரணம் நெருங்கும் போது அவர் சொன்னார், எனக்கு வருத்தம் எதுவும் கிடையாது. நான் நிறைவாழ்க்கை வாழ்ந்து விட்டேன் என்று சொன்னார். தனக்குப் பின்னால் தனது குடும்பம், தனது செயலைத் தொடர்ந்து செய்ய வழிகாட்டினார்.

நன்னன் காலத்தைப் போலவே, புத்தக வெளியீடுகள் நடக்கின்றன. சமூக சேவை தொடர்கிறது. விழாக்கள் நடக்கின்றன. நன்னன் அவருடைய நூற்றாண்டை கொண்டாடும் இந்த நேரத்தில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் இருக்கின்ற காரணத்தால், அந்தப் பெருமையோடு நான் குறிப்பிட விரும்புகிறேன். தமிழ்நாடு

அரசின் சார்பில் நன்னன் அவர்களுக்குப் புகழ் சேர்த்திடும் வகையில், நன்னன் அவர்களின் புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நன்னன் அவர்களின் குடும்பத்தினரோ, உறவினர்களோ, வேறு யாரும் கோரிக்கைகளை இந்த நேரத்தில் வைக்கவில்லை. யாரும் வைக்காமல் இந்த கோரிக்கையை நான் செய்கிறேன் என்று சொன்னால், நன்னன் குடியில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில், இந்த அறிவிப்பை செய்திருக்கிறேன்.

நன்னன் அவர்கள் காலமாகவில்லை, அவர் காலம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. நன்னன் புகழ் வாழ்க! நன்னன் குடி செழிக்கட்டும் என வாழ்த்தி விடை பெறுகிறேன் என முதல்வர் ஸ்டாலின் தனது உரையை முடித்துக் கொண்டு நன்றி தெரிவித்தார்.

வீடியோ லிங்க்..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x