Last Updated : 30 Jul, 2023 06:15 PM

3  

Published : 30 Jul 2023 06:15 PM
Last Updated : 30 Jul 2023 06:15 PM

மதுரையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி டோல்கேட் ஊழியர் உயிரிழப்பு: இருவர் காயம் 

விபத்தை ஏற்படுத்திய லாரி மற்றும் விபத்துக்குள்ளான ஆம்னி கார்.

மதுரை: மதுரை பாண்டிகோயில் அருகே கட்டுபாடு இழந்த லாரி டோல்கேட் எதிர்திசைக்கு மாறி மோதியதில் ஊழியர் ஒருவர் உடல் சிதைந்து பலியானார். இந்த விபத்தின்போது லாரி கார் மீதும் மோதியதால் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மதுரை பாண்டிகோயில் சந்திப்பு அருகே சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட மஸ்தான்பட்டி சுங்கச்சாவடி செயல்படுகிறது. ராமநாதபுரம் , தென்மாவட்டங்கள், கேரளா, திருவனந்தபுரம் செங்கோட்டை போன்ற இடங்களுக்குச் செல்லும் பேருந்து உள்ளிட்ட கனரக வானங்கள் அதிகமாக செல்வதால், குறிப்பிட்ட நேரத்தில் இந்த சுங்கச் சாவடியில் வாகன நெருக்கடி காணப்படுகிறது

இந்நிலையில், ஆந்திரா மாநிலம் காக்கிநாடா பகுதியில் கேரளாவுக்கு சுமார் 31 டன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்ட டாரஸ் லாரி (14 டயர்களை கொண்டது) ஒன்று மதுரை ரிங்ரோடு வழியாக சென்றது. லாரியை ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், மர்ச்சலாவை சேர்ந்த பாலகிருஷ்ணன் (41) என்பவர் ஓட்டினார். இன்று மதியம் பாண்டிகோயில் அருகிலுள்ள மஸ்தான்பட்டி டோல்கேட் அருகே சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, டோல்கேட் கடக்க முயன்றுள்ளது. டோல்கேட் பாதையில் சுங்கக் கட்டணம் பரிசோதனைக்காக வாகனங்கள் காத்திருந்ததால் வேறு வழியில் எதிர் திசையிலுள்ள பாதைக்கு ஓட்டுநர் லாரியை திருப்பியுள்ளார்.

இதை அறிந்து அங்கு பணியில் இருந்த டோல்கேட் ஊழியர் சதீஸ்குமார் ஓட்டுநரை எச்சரித்து தடுக்க முயன்றுள்ளார். இருப்பினும், அவர் மீது மோதிய சரக்கு லாரி, அவரை சிறிது தூரம் இழுத்துச் சென்றது. தொடர்ந்து கட்டணம் வசூல் கூண்டிலும் மோதி வேகத்தில் எதிர் திசையில் பாண்டிகோயில் சந்திப்பு நோக்கி, வந்துகொண்டிருந்த ஆம்னி கார் மீதும் மோதியது. சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு மேல் காரை இழுத்துச் சென்று நின்றது. காரின் முன்பகுதி அப்பளம் போன்று நொறுங்கியது. இந்த விபத்தில் மதுரை சக்கிமங்கலம் எல்கேடி நகர் பன்னீர் செல்வம் மகன் சதீஸ்குமார் (37) உடல் சிதைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். டோல்கேட் பெண் ஊழியர் ஒருவரும், ஆம்னி காரில் பயணித்த ஓட்டுநர் உட்பட 2 பேரும் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மதுரை மாகநகர போக்குவரத்து பிரிவு கூடுதல் துணை ஆணையர் திருமலைக்குமார், காவல் ஆய்வாளர் தங்கமணி உள்ளிட்ட தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்த சதீஸ்குமார் உடல் மற்றும் காயமடைந்தவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு போக்குவரத்தை சீரமைத்தனர். டோல்கேட் பகுதியில் போக்குவரத்து பாதித்தது. இரு புறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் கூறுகையில், ''பாண்டிகோயில் மேம்பாலத்தில் இருந்து இறங்கும்போதே சரக்கு லாரிக்கு பிரேக் பழுதானதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த ஓட்டுநர் சாலையோரத்தில் ஏதாவது மரத்தில் மோதி நிறுத்தலாம் என, முயன்றாலும், இருபுறமும் ஓட்டல் போன்ற வர்த்தக நிறுவனங்கள் இருந்ததால் அதற்கான வாய்ப்பு இல்லை. இதையும் தாண்டி டோல்கேட் முன்பு இரு வேகத்தடைகள் உள்ளன. அதிலும், அவரால் லாரியை நிறுத்த முடியாமல், டோல்கேட்டின் எதிர்திசையில் நுழைந்ததால் இத்தகைய கோர விபத்து நேர்ந்துள்ளது. இவ்விபத்துக்கு வேறு காரணம் ஏதேனும் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரிக்கிறோம்'' என்றனர்.

டோல்கேட் பகுதியில் அதிகரித்த ஆக்கிரமிப்பு: மஸ்தான்பட்டி டோல்கேட் துவங்கியபோது, இருபுறமும் தாராளமாக இடவசதி இருந்தது. தற்போது, டோல்கேட்டுக்கு மிக அருகில் தனியார் கார் விற்பனை நிறுவனங்கள், ஓட்டல், டீக்கடை போன்ற கடைகள் புற்றீசல் போன்று பெருகியதால் நெருக்கடி அதிகரித்துள்ளது. அவ்விடத்தில் சாலை ஆக்கிரமிப்பு நெருடிக்கடியை தவிர்க்க, நெடுஞ்சாலை துறையினர், காவல்துறையினருக்கு ஆய்வு நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x