Published : 30 Jul 2023 04:54 PM
Last Updated : 30 Jul 2023 04:54 PM

தக்காளி சந்தை வரலாற்றில் ஒரு மாதத்துக்கும் மேல் நீடிக்கும் விலை உயர்வு: தமிழகத்தில் குறைவது எப்போது?

மதுரை: தக்காளி சந்தை வரலாற்றிலேயே ஒரு மாதத்துக்கும் மேலாக விலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகா, ஆந்திராவுக்கு தமிழக தக்காளி செல்வதால் கிலோ ரூ.170 முதல் ரூ.200 வரை உயர்ந்துள்ளது.

கர்நாடகா, ஆந்திராவில் மழையால் தக்காளி அழிந்ததால் தமிழக தக்காளிக்கு வரவேற்பு கூடியுள்ளதால் தக்காளி விலை குறையாமல் மீண்டும் விலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தக்காளி சந்தை வரலாற்றிலேயே ஒரு மாதத்துக்கும் மேலாக விலை உயர்வு நீடிக்கும் நிலையில் நேற்று மதுரையில் ஒரு கிலோ தக்காளி ரூ.170 முதல் ரூ.200 வரை விற்பனையானதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தமிழகத்தில் தக்காளி விற்பனைக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சந்தை, மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி, பரவை சந்தைகள், திருப்பூர் தென்னம்பாளையம் சந்தை, கோவை மலுமிச்சம்பட்டி சந்தை மற்றும் சென்னை கோயம்பேடு சந்தை போன்றவை முக்கியமானது. இந்த சந்தைகளில் தக்காளிக்கு நிர்ணயிக்கப்படும் விலையே தமிழகத்தின் பிற மார்க்கெட்டுகளிலும், சில்லறை விற்பனைகளிலும் வியாபாரிகள் நிர்ணயம் செய்கின்றனர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை சந்தைகளில் குறையாமல் இருந்து வருகிறது. நாட்டில் தக்காளி உற்பத்தி மற்றும் விற்பனையில் தமிழக, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.

கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் கடந்த ஒரு மாதத்துக்கு முன் ஒரே நேரத்தில் பெய்த மழையால் பயிரிடப்பட்ட தக்காளி செடிகள் அழிந்தன. தமிழகத்தை ஒப்பிடும்போது, கர்நாடகா, ஆந்திராவில் தக்காளி விவசாயம் அதிகம். அதனால், தமிழகத்தில் தக்காளி விலை குறைந்தால் கர்நாடகா, ஆந்திரா தக்காளிகள் விற்பனைக்கு வரும். விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். ஆனால், கர்நாடகா, ஆந்திராவில் இந்த முறை கன மழையாக பெய்ததால், அங்கு உற்பத்தியான தக்காளி அம்மாநில தேவைக்கே போதுமானதாக இல்லை. தமிழகத்திலும் விவசாயிகள் பயிரிட்ட தக்காளி செடிகள் அறுவடைக்கு வரவில்லை. அதனால், தமிழகத்தில் தக்காளி விலை கிலோ ரூ.100ஐ தொட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் தக்காளி அறுவடை ஓரளவு தொடங்கிய நிலையிலும் தக்காளி விலை குறையவில்லை. மாறாக நேற்று மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் 15 கிலோ பெட்டி தரத்தை பொறுத்து ரூ.2000 வரை விற்பனையானது. கிலோ ரூ.150 முதல் ரூ.170 வரை விற்பனையானது. அதனால், சில்லறை விற்பனை கடைகள், மளிகை கடைகளில் நேற்று தக்காளி விலை கிலோ ரூ.200ஐ தொட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மதுரை மாட்டுத்தாவணி சென்டரல் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சங்கத்தலைவர் என்.சின்ன மாயன் கூறுகையில், ''காய்கறி சந்தைகளில் எளிதில் அழுகக்கூடிய, அழியக்கூடிய தக்காளி விலை நிலையாக இருக்காது. திடீரென்று விலை கூடும், குறையும். ஆனால், தக்காளி சந்தை வரலாற்றிலேயே இந்த முறைதான் ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை குறையாமல் விற்கிறது. நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கறி வியாபாரம் செய்கிறேன். நானே, தக்காளி இதுபோல் தொடர்ந்து விலை அதிகமாக விற்றதை பார்க்க முடியவில்லை. நாங்கள் கிலோ ரூ.150 முதல் ரூ.170 விற்பதால் சில்லறை வியாபாரிகள் ரூ.200க்கு விற்க ஆரம்பித்துள்ளனர்.

தமிழகத்தில் பயிரிட்ட செடிகளில் தற்போது தக்காளி அறுவடை தொடங்கியிருக்கிறது. ஆனால், கர்நாடகா, ஆந்திராவில் தற்போது வரை மழை நிற்கவில்லை. அதனால், அந்த இரு மாநில வியாபாரிகளும், தமிழகத்தில் தக்காளியை தற்போது கொள்முதல் செய்ய ஆரம்பித்ததால் நமது மாநிலத்தில் உற்பத்தியாகும் தக்காளிகள் அந்த மாநிலங்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளன. மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பில் தமிழக அரசும், தோட்டக்கலைத்துறையும் அலட்சியம் காட்டுவதால் விலை குறையும்போது விவசாயிகள் பெரும் நஷ்டமடைகின்றனர். அதனால், அவர்கள் மீண்டும் தக்காளி பயிரிட அஞ்சுகின்றனர். மேலும், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக பருவம் தவறி பெய்த மழை, நீண்ட கொளுத்தும் வெயிலும் காய்கறிகள் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.

இன்னும் ஒரிரு வாரங்களில் ஆந்திராவில் ஆனந்தபூர், கல்யாண துர்கா, தாவணிக்கரை, மூன்று இடங்களில் தக்காளி வர ஆரம்பித்துவிடும். ஆனந்தப்பூர் தக்காளி சந்தை இந்தியாவுக்கே தக்காளியை வழங்கிவிடும். அப்போது தமிழகத்தில் தக்காளி மிகக் குறைவாக விற்க ஆரம்பிக்கும். இன்னும் 15 நாட்கள் இந்த விலை நிற்காது. இன்னும் ஒரு வாரம் முதலே தக்காளி வரத்து தமிழக சந்தைகளில் வர ஆரம்பித்து விலை குறைய வாய்ப்புள்ளது'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x