Published : 30 Jul 2023 11:52 AM
Last Updated : 30 Jul 2023 11:52 AM
சென்னை: "அத்திக்கடவு – அவினாசி திட்டத்துக்கு விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நஷ்டஈட்டை உடனடியாக வழங்க வேண்டும். திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற, உரிய திட்டப்பணியை விரைந்து துவக்கி முடிக்க வேண்டும்" என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை, திருப்பூர், ஈரோடு மக்களின் 60 ஆண்டுகால கனவுத் திட்டம் அத்திக்கடவு - அவினாசி திட்டம். இத்திட்டம் கடந்த ஆட்சிகாலத்தில் ரூபாய் 1,652 கோடி மதிப்பீட்டில் கொண்டு வரப்பட்டது.
அத்திக்கடவு – அவினாசி திட்டம் செயல்படுவதின் மூலம் கொங்கு மண்டலத்தில் உள்ள 31 ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 538 நீர்நிலைகளில் நீர் நிரப்பப்படும். இதன் மூலம் அப்பகுதியில் வாழும் 35 லட்சம் மக்கள் குடிநீர்; தேவை பூர்த்தி செய்யப்படும். அதோடு 1.30 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்ட அத்திக்கடவு - அவினாசி திட்டம் தற்பொழுது தமிழக அரசின் மெத்தன போக்கால் மிகுந்த காலதாமதத்தோடு நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசு இத்திட்டத்துக்கு நிலம் அளித்தவர்கள் மற்றும் குழாய் பதிக்க நிலம் அளித்தவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையையும் அளிக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக பயிர் இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை.
இத்திட்டத்துக்கு நிலம் அளித்தவர்களுக்கு அதிகபட்ச நஷ்டஈடு வழங்கப்படும் என்று அரசு அளித்த வாக்குறுதியின் படி வழங்காமல் காலம் தாழ்த்துகிறது. இதனால் விவசாயிகள் மகவும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். ஆகவே தமிழக அரசு அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை தாமதம் இல்லாமல் நிறைவேற்ற உரிய நடவடிக்கையை துரிதமாக எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நஷ்ட ஈட்டை உடனடியாக வழங்க வேண்டும். திட்டத்தை முழுமையாக நிறைவேற, உரிய திட்டப்பணியை விரைந்து துவக்கி நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT