Published : 30 Jul 2023 04:53 AM
Last Updated : 30 Jul 2023 04:53 AM

வாரிசுகள் இல்லாத குடும்பத் தலைவர் இறக்க நேரிட்டால் யாருக்கு வாரிசு சான்றிதழ் வழங்குவது? - உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வாரிசுகள் இல்லாத மணமான குடும்பத் தலைவர் இறக்க நேரிட்டால் யாருக்கு வாரிசு சான்றிதழ் வழங்குவது என்பது குறித்து அரசாணையில் திருத்தம் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அம்பத்தூரை சேர்ந்த எஸ்.சந்தானம் கடந்த ஆண்டு பிப்ரவரியிலும், அவரது மனைவி அதற்கு ஒரு மாதம் முன்பாகவும் இறந்துவிட்டனர். இவர்களுக்கு வாரிசுகள் யாரும் இல்லாத நிலையில், தங்களது பெயரில் வாரிசு சான்றிதழ் வழங்கக்கோரி சந்தானத்தின் சகோதரர் ராஜேந்திரன் மற்றும் அவரது இரு சகோதரிகள் பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் வாரிசு சான்றிதழ் வழங்க தாமதம் செய்து வருவதாக குற்றம் சாட்டி ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மணமான ஆண் இறக்கும்பட்சத்தில் வாரிசு சான்றிதழ் எவ்வாறு வழங்க வேண்டுமென்பது குறித்து வருவாய் துறை சார்பில் விதிகள் வகுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில், தங்களது பெற்றோர் மற்றும் சகோதரர் சந்தானமும், அவருடைய மனைவியும் இறந்து விட்டதாலும், சந்தானத்துக்கு நேரடி வாரிசுகள் இல்லை என்பதாலும், அவரது வீடு மற்றும் வங்கி கணக்குகளை கையாள அவருடன் உடன் பிறந்தவர்கள் என்ற இரண்டாம் நிலை வாரிசு என்ற அடிப்படையில் எங்களுக்கு வாரிசு சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.சேஷசாயி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் வாரிசுகள் இல்லாத மணமான குடும்பத் தலைவர் இறக்கும் பட்சத்தில் யாருக்கு வாரிசு சான்றிதழ் வழங்குவது என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை. எனவே இந்து வாரிசுரிமை சட்டத்துக்கு பொருந்தும் வகையில் அந்த அரசாணையில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரர் அளித்துள்ள விண்ணப்பத்தை பெரம்பூர் வட்டாட்சியர் 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x