Published : 30 Jul 2023 07:07 AM
Last Updated : 30 Jul 2023 07:07 AM
சென்னை: தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க் களுடன் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆக. 4-ம் தேதி டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக 4 ஆண்டுகளுக்கு மேல் கே.எஸ்.அழகிரி தொடர்கிறார். அண்மைக்காலங்களில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைவர் மாற்றப்பட்ட நிலையில், அழகிரி இன்னும் மாற்றப்படவில்லை. இதனால் மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர், டெல்லி தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதையடுத்து, தமிழக மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசிக்க, அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆக.4-ம் தேதி டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநில முன்னாள் தலைவர்கள், 8 எம்.பி.க்கள், 18 எம்எல்ஏ-க்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு புதிய தலைவர் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. அதேநேரத்தில், ‘‘கே.எஸ்.அழகிரியே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக தொடர்வார். அவர் தலைமையில் தமிழக காங்கிரஸ், மக்களவைத் தேர்தலை சந்திக்கும். அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நிர்வாகிகள் உட்கட்சிப் பூசலை மறந்து, காங்கிரஸ் கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற பாடுபட வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே அறிவுறுத்துவார்’’ என்றும் கட்சியினர் சிலர் கூறுகின்றனர்.
எனினும், இந்த விவகாரம் தொடர்பாக ஆக.4-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT