Published : 17 Nov 2017 09:33 AM
Last Updated : 17 Nov 2017 09:33 AM
சென்னையில் இயங்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில், தொழில்நுட்ப உறுப்பினர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து நீதித்துறை உறுப்பினர் மட்டுமே இருப்பதால் வழக்குகளின் விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த உறுப்பினரும் வரும் ஜனவரியில் ஓய்வு பெறவுள்ளதால் பசுமை தீர்ப்பாயத்தை தற்காலிகமாக மூடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் சார்ந்த வழக்குகளில் விரைவாக தீர்ப்பு வழங்குவதற்காக மத்திய அரசால் தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் இயற்றப்பட்டு, பசுமை தீர்ப்பாயங்களும் திறக்கப்பட்டன. டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னை, போபால், புனே, கொல்கத்தா ஆகிய 4 இடங்களில் மண்டல பசுமை தீர்ப்பாயங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் டெல்லியில் உள்ள இரு முதன்மை அமர்வுகளுக்கு அடுத்தபடியாக சென்னையில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில்தான் 1,050-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. அதனால் டெல்லிக்கு அடுத்தபடியாக, சென்னையில் 2-ம் அமர்வும் தொடங்கப்பட்டது.
சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் தொழில்நுட்ப உறுப்பினராக இருந்த பி.எஸ்.ராவ் நேற்று முன்தினம் ஓய்வுபெற்றார். தற்போது நீதித்துறை உறுப்பினர் மட்டுமே உள்ளார். அதனால் நேற்று அனைத்து வழக்குகளின் விசாரணையும் தள்ளி வைக்கப்பட்டன. வரும் நாட்களிலும் இதே நிலைதான் தொடரும். பல மாதங்களாக தொழில்நுட்ப உறுப்பினர் பதவி நிரப்பப்படாத நிலையில், 2-வது அமர்வில் மனுக்கள் மீது விசாரணையே நடத்தப்படவில்லை. இதனால் சென்னையில் விசாரிக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 544 ஆக குறைந்துவிட்டது.
இது தொடர்பாக பசுமை தீர்ப்பாய அலுவலக அதிகாரிகள் கூறும்போது, “தொழில்நுட்ப உறுப்பினர் இல்லாமல், நீதித்துறை உறுப்பினர் மட்டும் எந்த வழக்கையும் விசாரிக்க முடியாது. அதனால் வரும் நாட்களில், அனைத்து சுற்றுச்சூழல் சார்ந்த வழக்கு விசாரணைகளும் தள்ளிவைக்கப்படும். நீதித்துறை உறுப்பினரும் வரும் ஜனவரி 3-ம் தேதி ஓய்வுபெற உள்ளார். இதே நிலைதான் போபாலிலும் உள்ளது. அதனால் வரும் ஜனவரியில் சென்னை மற்றும் போபாலில் இயங்கி வரும் பசுமை தீர்ப்பாயங்களை தற்காலிகமாக மூட பசுமை தீர்ப்பாய தலைமை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது” என்றனர்.
நிரப்பாதது ஏன்?
பசுமை தீர்ப்பாயங்களில் காலியிடங்களை நிரப்பாதது குறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது:
மத்திய அரசு சார்பில் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட நிதி சட்டத்தில் பசுமை தீ்ர்ப்பாயம் உள்ளிட்ட பல்வேறு தீர்ப்பாயங்களுக்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வது தொடர்பான விதிகள் திருத்தப்பட்டுள்ளன. முன்பு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் பதவிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் விண்ணப்பிக்கலாம். தற்போது நீதித்துறை அனுபவம் இல்லாத பசுமை தீர்ப்பாயத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த தொழில்நுட்ப உறுப்பினரும் விண்ணப்பிக்கலாம் என்ற நிலை உள்ளது. மேலும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளும் விண்ணப்பிக்கலாம். உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. பதவிக்காலம் முடிவதற்குள் உறுப்பினர்களை நீக்கவும் வழிவகை செய்யப் பட்டுள்ளது.
இதை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் உறுப்பினர்கள் தேர்வை நடத்த தடை விதிக்கவில்லை என்றாலும், உறுப்பினர்கள் தேர்வை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே பசுமை தீர்ப்பாய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்வு நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT