Published : 29 Jul 2023 05:47 PM
Last Updated : 29 Jul 2023 05:47 PM
புதுச்சேரி: தமிழக பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனியின் பேச்சைக் கண்டித்துள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, “இங்கு நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமுகமான உறவை குலைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பள்ளிக் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வித் துறை சார்பில் தேசிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட 3-ம் ஆண்டு விழா கருவடிக்குப்பம் ஈசிஆர் சாலையில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசியது: "முதல்வர் ரங்கசாமி கல்வித் துறையில் ஏற்கெனவே பல முன்னேற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். இன்று புதிய கல்விக் கொள்கையை எந்தவித சிரமமும் இல்லாமல் நிறைவேற்ற ஏற்கெனவே புதுச்சேரி தயாரான கட்டமைப்பில் இருந்ததுதான் காரணம். அதற்காக முதல்வருக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.
மாணவர்களை வகுப்பறையில் இருந்து உலக அரங்குக்கு கொண்டுவர வேண்டும் என்ற மிகப் பெரிய நோக்கத்தோடு புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய கல்வி கொள்கை பல மாற்றங்களை கொண்டு வந்து பல ஏற்றங்களை கொடுப்பதாக இருக்கிறது. அதனால், புதிய கல்விக் கொள்கை தாய்மொழி கல்வியை முதலில் ஊக்கப்படுத்துகிறது.
தாய் மொழியில் தொடக்கக் கல்வி பெறும் குழந்தைகள் வெற்றியாளர்களாக மாறுகிறார்கள். தமிழில் கற்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கை சொல்லிக் கொடுக்கிறது. எல்லோருக்கும் சமமான கல்வியை கொடுப்பதுதான் புதிய கல்வி கொள்கை. சமச்சீர் கல்விக் கொள்கை யாருக்கும் சமமான கல்வியை தரவில்லை. எல்லோருக்கும் சமமான கல்வி, சீரான கல்வியை தருவதுதான் புதிய கல்விக் கொள்கை. முதல்வர் தொலைநோக்கு பார்வையோடு கல்வியை மேம்படுத்தி இருக்கிறார்.
தமிழக பாடநூல் கழகத்தின் தலைவர் (திண்டுக்கல் லியோனி), புதுச்சேரி முதல்வர் தலையாட்டி பொம்மையாக செயல்படுகிறார் என்று கூறுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அமைச்சரவையில் முதல்வர் கல்வி திட்டத்துக்கு தேவையானவற்றை செய்யும்போது ஆளுநராக ஒப்புதல் தருவேன். புதுச்சேரியை பொறுத்தமட்டில் நாம் கல்வியில் முன்னேறி வருகிறோம், இதை அறியாமல் தமிழகத்தில் இருந்து வருபவர்கள் சிபிஎஸ்இ பாடத்தை பின்பற்றி வருவதை விமர்சனம் செய்வதை ஒப்புக்கொள்ள முடியாது. இந்திய அளவில் புதுச்சேரி கல்வி, மருத்துவத் துறைகளில் ஆறாவது இடத்திலிருந்து நான்காவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது என்று கருத்துக்கணிப்பு வந்திருக்கிறது.
கல்வி, மருத்துவம், பொருளாதாரக் குறியீடுகளில் பிரதமரின் தனிப்பட்ட பொருளாதார பிரிவு ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் கருத்துக்கணிப்பில் அடிப்படை வசதிகள் கொண்ட மாநிலங்களில் புதுச்சேரி முதல் இடத்தில் இருக்கிறது. இவை அனைத்தும் இந்த ஆட்சியால்தான். அதனால் அதற்கு உறுதுணையாக இருக்கிறேன். அவர்கள் எதைக் கேட்கிறார்களோ, அதை மக்கள் நலன் சார்ந்து ஒப்புக்கொண்டு கோப்புகளில் கையெழுத்து இடுகிறேன். இங்கு நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமுகமான உறவை குலைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்.
எந்தப் பாடத்தை எடுத்து படித்தாலும் பரவாயில்லை விரும்பின நேரத்தில் வேறு பாடங்களை எடுத்து படிக்கலாம் என்ற வாய்ப்பினை புதிய கல்விக் கொள்கை தருகிறது. அறிஞர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் கருத்துகளை பெற்றுதான் புதிய கல்விக் கொள்கை தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்" என்று அவர் பேசினார்.
திண்டுக்கல் லியோனி விமர்சனம்: முன்னதாக, ஆளுநரின் சொல்லுக்கு ‘தலையாட்டி பொம்மை’ போல முதல்வர் ரங்கசாமி செயல்படுகிறார் என தமிழக பாடநூல் கழகத் தலைவர் லியோனி விமர்சித்திருந்தார்.
புதுச்சேரியில் நேற்று அவர் பேசும்போது, “ஆளுநரின் சொல்லுக்கு ‘தலையாட்டி பொம்மை’ போல முதல்வர் ரங்கசாமி செயல்படுகிறார். தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை, தமிழக பாடநுால் கழகத்தின் நூல்களை எடுத்துவிட்டு சிபிஎஸ்இ நூல்களை கொடுத்துள்ளார். தமிழுக்கு தொண்டு செய்தவர் குமரி அனந்தன். அவரின் தொண்டுக்கு தமிழிசை துரோகம் செய்து வருகிறார். இந்த துரோகத்துக்கு முடிவு கட்ட புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைய வேண்டும்.
புதுவையில் நாடகம் நடத்தி, ஆட்சி நடத்தும் என்.ஆர்.காங்கிரஸ் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சிக்கு முடிவுகட்டி, புதுச்சேரியிலும் திமுக ஆட்சி அமைத்து, திராவிட மாடல் ஆட்சி நடக்கும். வருகிற மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் திமுககூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றிபெறும்" என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT