Published : 29 Jul 2023 03:53 PM
Last Updated : 29 Jul 2023 03:53 PM
கடலூர்: கடலூர் மாநகரின் இதயப் பகுதியாக பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மஞ்சக்குப்பம் மைதானம், அண்ணா விளையாட்டரங்கம் ஆகியவை அமைந்துள்ளது. இதில், மஞ்சக்குப்பம் மைதானம் சுமார் 35 ஏக்கரில் அமைந்துள்ளது. தமிழகத்தில், மதுரை தமுக்கம் மைதானத்துக்கு அடுத்தப்படியான மிகப்பெரிய மைதானம் இது.
கடலூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த மைதானத்தில் அவ்வப்போது கண்காட்சி, பொருட்காட்சி, அரசியல் கட்சிகளின் மாநாடுகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அறிமுகமானது இந்த மஞ்சக்குப்பம் மைதானம்.
1982-ம் ஆண்டு, ஜூன் மாதம் 19-ம் தேதி கடலூர், விழுப்புரம் பகுதிகள் ஒன்றிணைந்து இருந்த போது, அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகரான கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில், அதிமுக சார்பில் மகளிர் அணி மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாடு தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசியலில் திருப்பத்தை கொடுத்தது. கடலூரில் முதன்முதலில் புத்தகக் கண்காட்சி நடந்ததும் இந்த மைதானத்தில் தான்.
கடலூர் மையப் பகுதியில் இந்த மைதானம் அமைந்திருப்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இவ்வழியாக சென்று வருவதோடு, மாலை நேரங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மைதானத்தில் காற்றோட்டமாக அமர்ந்து பேசி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இருப்பினும், தற்போது இந்த மைதானம் ஆக்கிரமிப்பால் சுருங்கியுள்ளது. குப்பை கொட்டும் இடமாக இந்த மைதானம் பயன்படுத்தப்படுதிறது.
வாகனம் நிறுத்தும் இடமாகவும் மாறியுள்ளது. இந்த மைதானம், இரவுப் பொழுதில் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளது. தினந்தோறும் இரவில், மதுப்பிரியர்கள் கும்பல் கும்பலாக இந்த மைதானத்தில் அமர்ந்து மது குடித்து வருகின்றனர்.
இந்த மைதானம் தற்போது திறந்த வெளி பாராக உள்ளது. காலை வேளைகளில் மது பாட்டில்கள் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. அத்துடன் காலி செய்த குடிநீர் பொட்டலங்கள், நொறுவல் தீனிகளின் குப்பைகள் தூக்கி வீசப்பட்டு சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. ஒரு சில மதுப்பிரியர்கள் அதிக போதையில் மதுபாட்டில்களை உடைத்து போடுவதால், நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் இடையூறுகள் ஏற்படுகின்றன.
மொத்தத்தில் மிகச்சிறப்பாக இருந்து வந்த இந்த மைதானம், தற்போது குடிப்பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளது. இவ்விஷயத்தில், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கடலூர் மாநகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT