Published : 29 Jul 2023 02:57 PM
Last Updated : 29 Jul 2023 02:57 PM

18 மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டம்: விவசாயிகளுக்கு கரிசனம் காட்டுமா அரசுகள்?

திருப்பூர்: தமிழகத்தில் தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை உச்சம் தொட்டிருக்கும் நிலையில், பல்வேறுமாவட்டங்களில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகிறார்கள். குறிப்பாககோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களில் ஜூலை 5-ம்தேதி முதல்இன்று வரை காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது.

ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் 10 நாட்களுடன் போராட்டம் நிறைவடைந்துள்ளது. தமிழகவிவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அனைத்து மாவட்டங்களிலும், விவசாயிகளை ஒற்றைக்குடையின் கீழ் இணைத்து போராட்டத்தை நடத்தி வருகிறது.

சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது: மத்திய அரசு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணைய அறிக்கையின்படி உற்பத்தி செலவுடன், 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து விவசாயிகளின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அனைத்து பொருட்களின் கொள்முதலை உறுதி செய்யவேண்டும்.

குறைந்தபட்ச ஆதார விலையை சட்டம் இயற்றி பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு அரசு தென்னை, பனையில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். தேங்காய், கடலை, நல்லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து, மானிய விலையில் நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்” என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.

தமிழகத்தின் தென்னை விவசாயிகளை காப்பாற்றும் வகையில், மத்திய அரசு கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.150 நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். தமிழ்நாடுஅரசு பச்சை தேங்காயை டன் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்ய வேண்டும்.

நெல் குவிண்டாலுக்கு ரூ.3ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம், மரவள்ளிக் கிழங்கு டன்னுக்கு ரூ.12 ஆயிரம், மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம், பசும் பாலுக்கு லிட்டர் ரூ.50, எருமைப்பாலுக்கு லிட்டர் ரூ.75 வழங்க வேண்டும். கறிக்கோழிகள் வளர்ப்புக்கு கிலோவுக்கு ரூ.12 விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.

அவிநாசிபாளையத்தில் கஞ்சி காய்ச்சும் போராட்டத் தில் பங்கேற்ற
விவசாயிகள், பெண்கள்.

பட்டுப்புழுவுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.700 நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்து, நூலாக மதிப்பு கூட்டி விற்பனை செய்ய வேண்டும். இப்படி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொதுவான கோரிக்கைகளுடன், அந்தந்த மாவட்டங்களின் பிரதான கோரிக்கைகளையும் சேர்த்து போராடி வருகின்றனர். அந்த வகையில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும், அமராவதி அணையை தூர்வார வேண்டும், அப்பர் அமராவதி அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் ஆகியவை வலியுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, “தமிழ்நாடு அரசு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அனைத்து வேளாண் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். விவசாயத்துக்கு இடையூறாக இருக்கும் காட்டுப்பன்றிகளை கேரளாவை போல சுட்டுக்கொல்ல அனுமதிக்க வேண்டும்.

மயில், யானை உள்ளிட்ட வனவிலங்குகள்ஏற்படுத்தும் சேதங்களுக்கு உடனடியாக சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் 63 விவசாயிகள் உயிர் தியாகத்தில் பெற்ற வேளாண் உரிமை மின்சாரத்தை ரத்து செய்வதற்கு வழிவகையாக அமைந்துள்ள, மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

தமிழ்நாடு அரசு அனைத்து விவசாயிகளுக்கும் தங்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். தெலங்கானா, ஒடிசா, மேற்குவங்கம், சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ளதை போல ஆண்டுதோறும் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் விவசாய மானியம் வழங்க வலியுறுத்தியும் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தியும் வருகிறோம்.

பல்வேறு மாவட்டங்களில் அரசியல், ஜாதி கடந்து வாழ்வாதார கோரிக்கைகளின் கீழ் ஒன்றிணைந்து 25 நாட்கள் நூதன போராட்டங்களை நடத்தினோம். காத்திருப்பு போராட்டம், வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்தனர்.

பல்வேறு பகுதிகளில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்றித்தரமத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அமைச்சர்கள் உறுதி அளித்தனர். இந்த கோரிக்கைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு மேலும் அழுத்தம் தரும் வகையில் 2-ம் கட்டமாக ஆகஸ்ட் 7-ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகங்களில் மனுகொடுக்கும் இயக்கத்தை தொடங்க உள்ளோம்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x