Published : 08 Nov 2017 11:34 AM
Last Updated : 08 Nov 2017 11:34 AM
மத்திய அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொண்டு ஓராண்டாகியுள்ள நிலையில், உற்பத்தி, விற்பனை பாதிப்பிலிருந்து முழுமையாக மீள தொழில் நிறுவனங்கள் போராடிக் கொண்டிருக்கின்றன. பணமில்லா பரிவர்த்தனைக்கான நடைமுறைச் சிக்கல்களால் தவிப்பதாகத் தெரிவிக்கின்றனர் தொழில்முனைவோர்.
நாட்டின் சிறந்த தொழில் நகரங்களில் ஒன்றான கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. நூற்பாலைகள், பொறியியல் நிறுவனங்கள், வார்ப்படத் தொழிற்சாலைகள், வேளாண் கருவிகள், ஜவுளித் தொழிலுக்கான உபகரணங்கள், மோட்டார் பம்புகள், வாகன உதிரிப் பாகங்கள், தங்க, வைர நகைப் பட்டறைகள், காற்றாலைக்கான பாகங்கள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கோவை மாவட்டம் மட்டுமின்றி, பிற மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளின் மதிப்பை நீக்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. புதிதாக ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. ஆனால், போதுமான அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடாததால்,பொதுமக்கள், தொழில் துறையினருக்கு பெரிய அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டன. பெரும்பாலான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு வாரச் சம்பளம் வழங்க முடியாமலும், மூலப் பொருட்கள், உதிரிப்பாகங்கள் வாங்க முடியாலும் திணறின.
பண மதிப்பு நடவடிக்கை மேற்கொண்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அதிலிருந்து தொழில் துறையினர் ஓரளவுக்கு மீண்டும், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் ஜிஎஸ்டி பிரச்சினையால் இன்னும் நெருக்கடி தொடர்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்கத் (காட்மா) தலைவர் எஸ்.ரவிக்குமார் 'தி இந்து'விடம் கூறியதாவது: குறுந்தொழில் நிறுவனங்கள் 90 சதவீதம் ரொக்கப் பரிவர்த்தனையை நம்பியுள்ள நிலையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் 90 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டது. 30 சதவீத தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர்.
வங்கிகளில் குறிப்பிட்ட முறைக்கு மேல் பணம் எடுத்தாலோ, செலுத்தினாலோ கட்டணம் வசூலிக்கிறார்கள். மின்னணு அட்டைகளைப் பயன்படுத்தும்போதும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது குறுந்தொழில்முனைவோருக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜிஎஸ்டி-யில் ஜாப் ஆர்டர் முறையில் தொழில்புரிவோருக்கு 18 சதவீத வரி விதிப்பு, தொழில்முனைவோரை நிலைகுலையச் செய்துள்ளது. எனவே, வங்கி, மின்னணு அட்டை பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். அல்லது குறைக்க வேண்டும். குறுந்தொழில் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி-யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றார்.
கோவை பம்ப்செட் மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிப்பாளர்கள் (கோப்மா) சங்கத் தலைவர் கே.மணிராஜ் கூறும்போது, 'பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் 80 சதவீத உற்பத்தியும், விற்பனையும் பாதிக்கப்பட்டது. தொழில்முனைவோர் மட்டுமின்றி, விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தற்போதும், வங்கி நடைமுறைகள், அரசு விதிமுறைகளை முழுமையாக அறிய முடியாத பாமர மக்கள், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மின்னணு முறையிலான பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது, பல இடங்களில் இணைய வேகம் குறைவான கம்ப்யூட்டர்கள், சரிவர வேலை செய்யாத ஸ்வைப் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றால் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே, பணமில்லா பரிவர்த்தனை நடவடிக்கைகளை கொஞ்சம், கொஞ்சமாகத்தான் மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
பணப் புழக்க குறைவால் பாதிப்பு
கோவை நகை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பி.முத்துவெங்கட்ராம் கூறும்போது, 'பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பணப் புழக்கம் பெரிதும் குறைந்துவிட்டது. இதனால், விற்பனை, உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், வேலைவாய்ப்பும் குறைந்துள்ளது. எனவே, பணப் புழக்கத்தை அதிகரிக்கவும், பணத்தைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தவும் மத்திய அரசு முன்வர வேண்டும்' என்றார்.
இந்திய தொழில் வர்த்தக சபை முன்னாள் தலைவர் டி.நந்தகுமார் கூறும்போது, 'பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் முதல் 3 மாதங்கள் கடும் நெருக்கடி ஏற்பட்டது. எனினும், புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்ட பிறகு, இந்த நிலை மாறியது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக தொழில் துறை மீண்டுள்ளது. எனினும், புதிதாக தொழில் தொடங்குதல், உரிமம் பெறுதல் உள்ளிட்டவற்றில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் கவலைக்குரியவை. எனவே, ஒற்றைச்சாளர முறையில் அனைத்து உரிமம், அனுமதிகளை வழங்குவது தொழில்துறைக்கு புத்துயிரூட்டும்' என்றார்.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் (கொடிசியா) தலைவர் வி.சுந்தரம் கூறும்போது, 'பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தொழில் துறை ஸ்தம்பித்தது. பின்னர், அதிலிருந்து மீண்டோம். ஆனால், அதற்குள் ஜிஎஸ்டி வந்துவிட்டது.
அதிக வரி விகிதம், நடைமுறைச் சிக்கல்களால் சிறு, குறு தொழில்நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, வரி விகிதங்களைக் குறைப்பதுடன், ஜிஎஸ்டி-யை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பது அவசியம். அப்போதுதான், தொழில்துறை முன்புபோல எழுச்சியுடன் இருக்கும்' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT