Published : 29 Jul 2023 04:03 AM
Last Updated : 29 Jul 2023 04:03 AM
சென்னை: நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்காக, பயிரிட்ட நிலத்தில் நெற்பயிர்களை புல்டோசரால் அழித்ததை பார்த்தபோது எனக்கு அழுகை வந்தது என்று வேதனை தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, எம்.தண்டபாணி, அறுவடை செய்யும் வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா என்று கேள்வி எழுப்பினார்.
இரு தரப்பு பிரச்சினை தொடர்பாக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்க கோரி என்எல்சி நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்குமாறு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு முறையிடப்பட்டது. அதன் விவரம்:
காவல் துறை தரப்பு: என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து பாமக நடத்திய போராட்டத்தின்போது வெடித்த வன்முறை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. (வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்தனர்.)
நீதிபதி: என்எல்சி நிர்வாகம் மற்றும் அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி ஆக.3-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். என்எல்சி பணியாளர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து அவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள். நிர்வாகத்தினர் அதற்காக பணத்தை செலவிடுங்கள். என்எல்சி கையகப்படுத்தியுள்ள நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனரே?
என்எல்சி நிர்வாகம்: நிலத்தின் மதிப்பைவிட உரிமையாளர்களுக்கு 3 மடங்கு அதிகமாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்திய நிலத்துக்கு 10ஆண்டுகளுக்கு முன்பு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது அந்த நிலத்தை சுவாதீனம் எடுக்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
நீதிபதி: 20 ஆண்டுகளாக சுவாதீனம் எடுக்காத நீங்கள், நெற்பயிர்களை அறுவடை செய்யும் வரை 2 மாதங்களுக்கு காத்திருக்க முடியாதா. பயிரிட்ட நிலத்தில் நெற்பயிர்களை புல்டோசரால் அழித்ததை பார்த்தபோது எனக்கு அழுகை வந்தது. ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறிய வள்ளலாரின் ஊருக்கு அருகிலேயே இந்த நிலைமையா. நிலம் எடுப்பதற்கு ஆயிரம் காரணம் பயிர்கள் அழிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இழப்பீடு பெற்றாலும்கூட பயிர்கள் அழிக்கப்படும்போது விவசாயிகளுக்கு கோபம்வரத்தான் செய்யும். அமெரிக்காவில் அரிசி வாங்க அலைமோதுகின்றனர். இங்கும் அதுபோன்ற சூழல் வரக்கூடும்.
நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே மிகப்பெரிய பஞ்சத்தை சந்திக்கப் போகிறோம். அரிசிக்கும், காய்கறிக்கும் அடித்துக்கொள்வதை நம் தலைமுறையிலேயே பார்க்கத்தான் போகிறோம். அப்போது நிலக்கரி பயன்படாது. இதற்காக என்எல்சி நிர்வாகம் கோபித்துக் கொண்டாலும் கவலையில்லை.
அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் கதாபாத்திரங்களின் ஊடே பயணிக்கும் நெய்வேலி, அணைக்கரையை ஒட்டி கொள்ளிடம் நோக்கி பாய்ந்து ஓடும்நதியின் அழகை மறக்கமுடியாது. அந்த இடங்கள் எல்லாம் தற்போது பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ‘சோழநாடு சோறுடைத்து’ என்ற பெருமையை என்எல்சி போன்ற நிறுவனங்களால் அந்த பகுதிகள் இழந்து வருகின்றன.
பூமியை தோண்டி நிலக்கரி, மீத்தேன் என ஒவ்வொரு வளத்தையும் எடுத்துக்கொண்டே இருந்தால், அந்த வெற்றிடத்தை நிரப்புவது எப்படி என்பதுதான் இயற்கை ஆர்வலர்களின் பெரும் கவலையாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் கை வைத்தால் தமிழகத்துக்கான பருவமழை சுத்தமாக நின்றுவிடும். மக்கள் பாதிக்கப்படுவதை அரசு அதிகாரிகளும் புரிந்து கொள்வது இல்லை. இயந்திரத்தனமாக செயல்படுகின்றனர்.
என்எல்சி தரப்பு வழக்கறிஞர் நித்யானந்தம்: நீதிமன்ற அறையில் பயன்படுத்தப்படும் மின் விளக்குகள், ஏ.சி. போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் நிலக்கரியில் இருந்துதான் எடுக்கப்படுகிறது.
நீதிபதி: பூமியில் இருக்கக்கூடிய அனைவரும் ஏ.சி. காற்றில் வாழ்வது இல்லை. புங்கைமர காற்றிலும், வேப்பமர காற்றிலும் இளைப்பாறுபவர்கள்தான் அதிகம் உள்ளனர். இதை அதிகாரிகள் உணரும்படி எடுத்துக்கூறுங்கள்.
இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து, விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT