Published : 18 Nov 2017 02:30 PM
Last Updated : 18 Nov 2017 02:30 PM
தமிழகத்தில் அக்டோபர் மாதம் வரை டெங்கு காய்ச்சலால் 17 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்; அதில் 52 பேர் உயிரிழந்தனர் என சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (சனிக்கிழமை) ஆய்வு மேற்கொண்டார்.
நோயாளிகளின் படுக்கை வசதி, மருந்தகம், ஆய்வு கூடங்கள், கர்ப்பிணிகள் சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளிடம், சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், "தமிழகத்தில் பருவமழை தொடரும் நிலையில் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத் துறை மூலம் தமிழகம் முழுவதும் சுகாதாரப் பணிகள் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றேன்.
தமிழகத்தில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுபடுத்தப்பட்டு உள்ளது. அக்டோபர் மாதம் வரை டெங்கு காய்ச்சலால் 17 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர் அதில் 52 பேர் உயிரிழந்தனர்.
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் மொத்தம் 80 பேர் பலியாகி உள்ளனர். 18 ஆயிரமாக மக்கள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 11 ஆயிரமாக குறைந்து உள்ளது.
சுகாதார துறையில் மருத்துவர்கள் செவிலியர்கள் காலி பணியிடங்களை நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காலிப் பணியிடங்கள் விரைவில் பூர்த்தி செய்யப்படும்.
டெங்கு கொசுவை ஒழிக்க அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் தலைமையில் சுகாதாரப் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும்.
போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டால் எளிதில் ஜாமினில் வராதவாறு கொலை குற்ற வழக்கில் வழக்கு பதிவு செய்ய பரிந்துரைக்கப்படும்.
கிருஷ்ணகிரி பகுதியில் அதிகமாக விபத்து ஏற்படுவதால், இந்தாண்டு 26 கோடி ரூபாய் மதிப்பில், மருத்துவ மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தலைமை மருத்துவமனையில் MRI ஸ்கேன் எடுக்கும் வசதி உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெங்கு தடுப்புப் பணிகள் மேற்கொள்வதிலும், தொடர் கண்காணிப்பு செய்வதிலும் மாநிலத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் முதன்மையாக உள்ளது.
உதாரணமாக, உலக அளவில் பெயர் பெற்ற ஜிகா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு மலை கிராம பகுதியான அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்டறியப்பட்டது. அதுபோன்ற, சுகாதார பணிகளை ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை களில் சிறப்பாக மேற்கொள்ள பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதம் வரையில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். " என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT