Published : 21 Nov 2017 09:53 AM
Last Updated : 21 Nov 2017 09:53 AM
ரயில் மோதி பயணிகள் இறப்பதை தடுக்க ரயில் நிலையங்கள், ரயில்பாதையையொட்டி புதிய நடைமேம்பாலம், சுரங்கப்பாதை அமைப்பது குறித்து உயர்மட்ட குழு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படையின் (ஆர்பிஎப்) மூத்த ஆணையர் லூயிஸ் அமுதன் தெரிவித்துள்ளார்.
2015-16-ம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள 22 ரயில்வே மண்டலங்களில் பல்வேறு விபத்துகளில் மொத்தம் 2,151 பேர் இறந்துள்ளனர். இதில், விதிமீறி தண்டவாளத்தை கடந்து சென்றதில் ரயில் மோதி 1,448 பேர் இறந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில், அதிகபட்சமாக மேற்கு ரயில்வேயில் 691 பேரும், 2-வது இடத்தில் தெற்கு ரயில்வேயில் 348 பேரும் இறந்துள்ளனர்.
இதற்கிடையே, ரயில்மோதி இறப்பது, படிகளில் பயணம் செய்து தவறி விழுந்து இறப்பது போன்றவை முற்றிலும் குறைக்க ரயில்வேத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, ரயில்பாதை, ரயில் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும், புதிய கட்டமைப்பு வசதிகள் உருவாக்குவது குறித்தும் ஆய்வு நடத்த ரயில்வேதுறை உத்தரவிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் இதற்காக 5 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைத்து, கோட்டங்களில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, எங்கெல்லாம் புதிய நடைமேம்பாலம், சுரங்கப்பாதைகள் அமைப்பது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படையின் மூத்த ஆணையர் லூயிஸ் அமுதன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: ரயில்வே சட்ட விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி, இந்த ஆண்டில் கடந்த மாதம் வரையில் ரயில் நிலையங்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த 17,689 பேரை கைது செய்துள்ளோம். இதேபோல், விதிமீறி ரயில்பாதைகளை கடந்து சென்ற 1,251 பேரையும், படிகளில் பயணம் செய்த 6,620 பேரையும் கைது செய்துள்ளோம். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. படிகளில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து கவுன்சலிங் அளித்து வருகிறோம்.
ரயில் படிகளில் பயணம் செய்து தவறி விழுந்து இறப்பது, விதிமீறி ரயில்பாதைகளை கடப்பது உள்ளிட்டவைகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க ரயில்வேத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். குறிப்பாக பயணிகள் பாதுகாப்பாக புதிய நடைமேம்பாலம், சுரங்கப்பாதைகள் அமைப்பது குறித்து 5 பேர் கொண்ட உயர்மட்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, சென்னை – விழுப்புரம், ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் ஆய்வுப் பணிகளை நிறைவு செய்துள்ளோம். எஞ்சியுள்ள இடங்களில் இன்னும் ஒரு மாதத்துக்குள் முடித்து, அதன் அறிக்கையை ரயில்வேதுறைக்கு அனுப்பிவைப்போம். இதன் அடிப்படையில் புதிய பாதுகாப்பு திட்டங்களை ரயில்வே அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT