Published : 28 Jul 2023 07:47 PM
Last Updated : 28 Jul 2023 07:47 PM

என்எல்சி போராட்ட வன்முறை | பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுவிப்பு

நெய்வேலி: நெய்வேலி என்எல்சியில் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுவிக்கப்பட்டார்.

என்எல்சியை முற்றுகையிட்டு பாமக போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் காவல்துறையினர் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார், தடியடி, கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தினா். மேலும், தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தைக் கலைக்க முயன்ற போலீஸார், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்தனர்.

இந்த கலவரத்தில், காவல்துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 400-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அன்புமணி ராமதாஸை விடுவிக்க கோரி கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அங்கு அரசுப் பேருந்துகள் இயக்கம் முழுமையாக நிறத்தப்பட்டன.

வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் நெய்வேலி விரைந்துள்ளார். இந்நிலையில், திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை மாலை விடுவிக்கப்பட்டனர். இதன்பின்னர், அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "நிலத்தை கையகப்படுத்துதல் வாழ்வாதாரத்துக்கும், விவசாயத்துக்கும் எதிரான ஒரு செயல். விவசாயிகளுக்கு எதிரான ஒரு செயல். காலங்காலமாக இந்த மண் நமக்கு சோறு போட்ட மண். இந்த மண்ணை தயவுசெய்து அழிக்காதீர்கள். என்எல்சி நிர்வாகத்துக்கு எத்தனையோ மாற்று வழிகள் இருக்கிறது. என்எல்சிக்காக ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தையும், விவசாயத்தையும் அழிக்காதீர்கள். நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை நிறுத்திவிடுங்கள். இது எங்களுடைய ஒரு அன்பான வேண்டுகோள்.

என்எல்சி நிர்வாகம் 66 ஆண்டு காலம் இந்த மண்ணையும், மக்களையும் அழித்து ஒழித்துவிட்டு இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறது. என்எல்சி நிர்வாகத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் தமிழகத்துக்கு இனி தேவை கிடையாது. அதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். பாமக தொடர்ந்து விவசாயத்துக்காக, விவசாயிகளுக்காக, விளை நிலங்களுக்காக, சுற்றுச்சூழலுக்காக, இயற்கையாக, நீர் நிலைகளுக்காக, மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடும்.

எந்தவகை போராட்டத்தையும் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். மண்ணுக்கும் மக்களுக்கும் அவர்களுடைய உரிமைகளைப் பெற எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறோம்.தமிழக முதல்வருக்கு மீண்டும் என்னுடைய அன்பான வேண்டுகோள், என்எல்சிக்காக நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்யுங்கள்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x