Published : 28 Jul 2023 07:26 PM
Last Updated : 28 Jul 2023 07:26 PM
மேட்டூர்: நெய்வேலி என்எல்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து, மேச்சேரி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
நெய்வேலி என்எல்சி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து, பாமக சார்பில் இன்று முற்றுகை போராட்டம், அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது, நுழைவு வாயில் முன்பு நுழைய முற்பட்ட அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதைக் கண்டித்து, மேச்சேரி பேருந்து நிலையம் முன்பு மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அன்புமணி ராமதாஸை கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற மறியலால், மேச்சேரியில் இருந்து, மேட்டூர், தருமபுரி, சேலம், பென்னாகரம் செல்லும் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். எம்எல்ஏ சதாசிவத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர் மறியலை கைவிட மறுத்த நிலையில், எம்எல்ஏ சதாசிவம் உள்பட பாமகவினரை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.
இதற்காக பேருந்து நிலையத்தில் இருந்த அரசு நகரப் பேருந்தை கொண்டு வந்தனர். எம்எல்ஏ சதாசிவத்தை கைது செய்யும் முயன்ற போது, கட்சியினருக்கும், போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, பாமகவினரை கைது செய்ய கொண்டு வந்த அரசு நகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் வேறு வாகனத்தை கொண்டு வந்து, எம்எல்ஏ சதாசிவம் உள்பட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
பின்னர், கண்ணாடி உடைந்த அரசு பேருந்தை டிஎஸ்பி மரியமுத்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதேபோல், மேட்டூர் பேருந்து நிலையம் முன்பு, பாமக நகர தலைவர் சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT