Published : 28 Jul 2023 06:38 PM
Last Updated : 28 Jul 2023 06:38 PM
சென்னை: “நெய்வேலியில் இருபது ஆண்டுகளாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சுவாதீனம் செய்யாமல் இருந்துவிட்டு, தற்போது பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்களுக்கு காத்திருக்க முடியாதா?” என்று என்எல்சி நிர்வாகத்திடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், என்எல்சி நிர்வாகம் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. என்எல்சி நிர்வாகத்துக்கும், அங்குள்ள தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பிரச்சினைகளின் காரணமாக, தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று என்எல்சி நிர்வாகம் கோரியிருந்தது.
இந்த அவசர வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், நெய்வேலியில் வெள்ளிக்கிழமை பாமக சார்பில் நடந்த போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது எனக் கூறி, அது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, என்எல்சி நிர்வாகத்துக்கும், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், மாவட்ட ஆட்சித் தலைவரும், காவல் கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
பின்னர், என்எல்சிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அகற்றியது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது என்எல்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பைவிட மூன்று மடங்கு அதிகமான இழப்பீடு வழங்கியுள்ளோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட அந்த நிலங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த நிலத்தை சுவாதீனம் எடுத்துக்கொள்ள நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்" என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “20 ஆண்டுகளாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சுவாதீனம் செய்யாமல் இருந்துவிட்டு, தற்போது பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்களுக்கு காத்திருக்க முடியாதா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “பயிரிடப்பட்டுள்ள நிலங்களில் புல்டோசரைக் கொண்டு கால்வாய் தோண்டும் பணிகளைப் பார்க்கும்போது எனக்கு அழுகை வந்துவிட்டது. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகில் பயிர்கள் அழிக்கப்படுவதை காண முடியவில்லை. நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் கூறினாலும், பயிர்களை அழிக்கப்படுவதை ஏற்க முடியாது. ஒரு பயிர் என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அந்த பயிர்தான் மனிதன் உள்ளிட்ட அத்தனை ஜீவராசிகளுக்கும் வாழ்வாதாரமாக இருக்கக் கூடியது. நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே மிகப் பெரிய பஞ்சத்தை சந்திக்கப் போகிறோம்.
அரிசிக்கும், காய்கறிக்கும் அடித்துக் கொள்ளும் காட்சிகளை நம் தலைமைுறையிலேயே நாம் காணப் போகிறோம். அப்படி ஒரு நிலை வரப்போகிறது. அப்போது இந்த நிலக்கரி எல்லாம் பயன்படாது. இந்தக் கருத்துகளுக்காக என்எல்சி நிர்வாகம் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை.
பொன்னியின் செல்வன் நாவலை ஒட்டி பயணிக்கக் கூடிய அணைக்கரை, கொள்ளிடம் பாய்ந்தோடும் நெய்வேலியின் அழகை மறக்கமுடியாது. ஆனால், இந்த இடங்கள் எல்லாம் தற்போது பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பஞ்சத்தின் ஆபத்தை உணராமல் தோண்டிக் கொண்டே இருக்கிறார்கள். சோறுடைத்த சோழநாடு என்ற பெருமையை இதுபோன்ற நிறுவனங்களால் இந்தப் பகுதிகள் அதன் பெருமையை இழந்துவிட்டன.
மேலும், பூமியைத் தோண்டி தோண்டி நிலக்கரி, மீத்தேன் என ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டே இருந்தால், அந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது? மூன்று மடங்கு அல்ல, எத்தனை மடங்கு இழப்பீடு வழங்கினாலும்கூட அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு விவசாயி என்ன செய்ய முடியும்? மக்கள் பாதிக்கப்படுவதை அரசு அதிகாரிகள் புரிந்து கொள்ளாமல் இயந்திரத்தனமாக செயல்பட்டுள்ளனர்” என்றார்.
இந்த விசாரணையின்போது குறுக்கிட்ட என்எல்சி தரப்பு வழக்கறிஞர், இந்த நீதிமன்ற அறையில் எரியும் மின் விளக்குகள், குளிர் சாதன வசதிக்கான மின்சாரம் கூட நிலக்கரியில் இருந்து தயாரிக்கப்பட்டதுதான் என்று தெரிவித்தார். இதையடுத்து, தனது அறையில் உள்ள குளிர் சாதன வசதியை நிறுத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார். பூமியில் உள்ள அனைவரும் ஏசி காற்றில் வாழ்வது இல்லை. புங்கை மரத்தின் காற்றிலும், வேப்ப மரத்தின் காற்றிலும் இளைப்பாறும் ஏராளமானவர்கள் உள்ளனர். அதிகாரிகள் இதனை உணர வேண்டும் என்று நீதிபதி தனது வேதனையையும், அதிருப்தியையும் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT