Published : 28 Jul 2023 07:43 PM
Last Updated : 28 Jul 2023 07:43 PM
சென்னை: சென்னையில் சாலைப் பணிகள் தொடர்பான விவாதத்தின்போது திமுக - அதிமுக கவுன்சிலர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று (ஜூலை 28) மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது திமுக, 152வது வார்டு கவுன்சிலர் பாரதி பேசுகையில், "அம்மா உணவகங்களில் பொருட்கள் கையாடல் செய்யப்படுகிறது. பணியாளர் பற்றாக்குறை இருப்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மேலும் தலைவர், துணை தலைவர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்படாமல் உள்ளனர்" என்றார்.
இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, ‘‘தலைவர், துணை தலைவர் இடமாற்றம் செய்யப்படுவர். அதேபோல், தவறு செய்யும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர். காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்,’’ என்றார்.
நேரம் இல்லா நேரத்தில், சென்னை மாநகராட்சியில் சாலை அமைக்கப்படாமல் உள்ளது என 84-வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஜான் பேசினார். இதைத் தொடர்ந்து பேசிய திமுக கவுன்சிலர் பரிதி இளம் சுருதி, "அதிமுக, ஆட்சியில் 10 ஆண்டுகளாக சாலை போடப்படாமல் இருந்தது. திமுக ஆட்சியில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதிமுக ஆட்சியை அடிமை ஆட்சி" என குறிப்பிட்டுப் பேசினார். அதனால், அதிமுக – திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது குறிக்கிட்ட மேயர் பிரியா, "நாங்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக பார்க்கிறோம். அதிமுக ஆட்சியில் திமுகவினருக்கு பேச அனுமதியில்லை. ஆனால், திமுக ஆட்சியில் அனைவரும் சமமாக பேச அனுமதிக்கப்படுகிறது" என்றார். இவற்றை கேட்ட அதிமுகவினர், கவுன்சில் கூட்டத்தில் பேசுவது எங்களது உரிமை; நீங்கள் போட்ட பிச்சை இல்லை என்று கூறியதால் தொடர்ந்து கூச்சல் நிலவியது. பின், துணைமேயர் மகேஷ்குமார் குறுக்கிட்டு சமதானப்படுத்தினார்.
மேலும், நேரம் இல்லாத நேரத்தில் பேசிய மேயர் பிரியா, "நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்படி தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும். ஆனால், சென்னை மாநகராட்சியில் இது முறையாக நடைபெறுவது இல்லை. எனவே, வட்டார துணை ஆணையர்கள், தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT