Published : 28 Jul 2023 06:24 PM
Last Updated : 28 Jul 2023 06:24 PM
மதுரை: ''வசூலாகும் பொதுநிதி எங்கே செல்கிறது, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்'' என்று மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். மேயர் இந்திராணி பேசுகையில், ''மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான மதத்தின் பேரில் ஆட்சி நடத்தும் மத்திய அரசு, அங்குள்ள மாநில அரசை மாநகராட்சி கண்டிக்கிறது. இந்த ஆட்சிகளை அகற்ற மக்கள் முடிவெடுப்பார்கள்'' என்றார். தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:
கிழக்கு மண்டலத்தலைவர் வாசுகி: கவுன்சிலர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டில் ரூ.5 லட்சம் நிதி கொடுத்துள்ளனர். ஆனால், எங்கள் மண்டலத்திற்கு மாதத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் வசூல் செய்து கொடுக்கிறோம். அதில் மண்டலத்திற்கு மாதம் ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் நிதி வழங்க வேண்டும். மழைநீர் கால்வாய், சாக்கடை கால்வாய், குடிநீர் குழாய் உடைப்பு மற்றும் அடைப்புகள் போன்ற சிறுசிறு பணிகளை மேற்கொள்ள நிதி இல்லாததால் இதுபோன்ற சிறு பணிகளுக்கு கூட மைய அலுவலகத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய உள்ளது. மேயர், ஆணையாளர், அனுமதி பெற்று நிதி வருவதற்குள் மக்கள் பாதிக்கப்பட்டுவிடுகிறார்கள். மண்டலத்திற்கு நிதி ஒதுக்காததால் எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை. அதனால், மண்டல கூட்டங்களையும் எங்களால் நடத்த முடியவில்லை.
வடக்கு மண்டலத்தலைவர் சரவண புவனேஷ்வரி: பாதி கவுன்சிலர்களுக்கு இன்னும் அலுவலக கட்டிடம் இல்லை. அவர்கள் எப்படி மக்களை சந்திக்க முடியும். மண்டல அளவில் உதவி பொறியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாமல் உள்ளனர். அதனால், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதமும் குறைந்தது. மாணவர் சேர்க்கையும் குறைந்துள்ளது. மாநகராட்சி கல்வி விஷயத்தில் சிறப்பு கவனம் எடுக்க வேண்டும்.
தெற்கு மண்டலத்தலைவர் முகேஷ் சர்மா: கூட்டத்தில் பேசவதற்கு 3 நிமிடங்கள் மட்டுமே தருகின்றீர்கள். ஆனால், கடந்த கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு கேட்ட கேள்விகளுக்கு தற்போது வரை எழுத்துபூர்வமாக பதில் தரவில்லை. அதற்கான பதில்களை இந்த கூட்டத்தில் கேட்பதற்குள் நீங்கள் கொடுத்த 3 நிமிடங்கள் போய்விடுகிறது. பிறகு எப்படி மக்கள் பிரச்சனைகளை பேச முடியும்.
அதிமுக எதிர்கட்சித்தலைவர் சோலைராஜா: கடந்த கூட்டத்தில் நான் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்கள் தப்பும், தவறுமாகவும் கொடுத்துள்ளனர். பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் 2023ம் ஆண்டு நவம்பரில் நிறைவடையும் என்று சட்டசபையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கூறியுள்ளாரே, அவர் கூறியபடி இந்த திட்டம் முடிவடையுமா என கேள்வி கேட்டால் அதற்கு அதிகாரிகள் பொத்தாம் பொதுவாக பணிகள் விரைவாக முடிப்தற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பதில் அளித்துள்ளர். குறிப்பிட்ட காலத்தை குறிப்பிடாமல் பொருத்தமில்லாமல் பதில் அளித்துள்ளனர்.
மேலும், மாநகராட்சியில் 3,66,000 குடிநீர் இணைப்புகள் உள்ள நிலையில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இதுவரை வெறும் 39,000 வீட்டிணைப்புகளே கொடுக்கப்பட்டுள்ளது. பெரியாறு குடிநீர் திட்டம் மதுரை மக்களின் உயிர் நாடிப்பிரச்சனை. இந்த திட்டம் ஆமை வேகத்தில் நடக்கிறது. 100 முதல் 150 சதவீதம் வரை வரியை உயர்த்திவிட்டு மக்களுக்கான பிரச்சனைகளை மேற்கொண்ட கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை. வசூலாகும் பொது நிதியை என்ன செய்கிறீர்கள். மாநகராட்சி இதுவரை எவ்வளவு வரி வசூல் செய்துள்ளது, அந்த பொதுநிதியில் என்னென்ன பணிகள் நடந்துள்ளது என்ற வெள்ளை அறிக்கையை தர வேண்டும்.
மேயர் இந்திராணி: உங்கள் ஆட்சியில் வெள்ளை அறிக்கை விட்டு உள்ளீர்களா? பணிகள் திட்டமிட்டப்படி முடிக்கப்பட்டு மக்களுக்கு பெரியாறு குடிநீர் வழங்கப்படும்.
திமுக கவுன்சிலர் நாகநாதன்: எச்எம்ஸ் காலனி தேனி மெயின் ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மேம்பாலம் கட்டுகிறது. இந்த பணிக்காக அவர்கள் இந்த சாலையில் உள்ள உள்ள குடிநீர், பாதாளசாக்கடை குழாய்களை இதுவரை 75 முறை உடைத்துள்ளனர். அதற்கான செலவை அவர்கள் ஏற்றுக் கொள்ள அவர்களை கேட்டால், உங்களை யாரு இதுபோன்ற முக்கிய சாலைகளில் குழாய்களை பதிக்க சொன்னது? என்கிறார்கள்.
அதுபோல், இந்த பாலம் பணி நடக்கும் சாலைகளில் இருந்த 20 எல்இடி தெரு விளக்குகளை காணவில்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறையை கேட்டால் மின்சார வாரியத்தினர் எடுத்து சென்றிருக்கலாம் என்கின்றனர். அவர்களை கேட்டால் ஒப்பந்ததார்களை சொல்கிறார்கள். இருவரையும் ஒன்றாக வைத்துக் கேட்டால் மாநில நெடுஞ்சாலைத்துறையை கை காட்டுகிறார்கள். ஒரு தெருவிளக்கின் மதிப்பு ரூ.12,500. மாநகராட்சி சொத்து எப்படியெல்லாம் போகிறது.
திமுக கவுன்சிலர் நூர்ஜஹான்: மண்டலத் தலைவர்கள் சரியாக இருந்தால் வார்டுகளில் அதிகாரிகள் சரியாக இருப்பார்கள். பணிகளும் சரியாக நடக்கும்.
மேயர்-திமுக கவுன்சிலர் வார்த்தைப்போர்: மாநகராட்சி கூட்டத்திற்கு வந்த காங்கிரஸ் கவுன்சிலர்கள் மட்டுமில்லாது, திமுக கவுன்சிலர்கள் பலரும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டவுடன் சிறிது நேரத்திலே வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். திமுக கவுன்சிலர்கள் பலர் கூட்டத்திற்கே வரவில்லை. அதனால், மாநகராட்சி கூட்டத்தில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன.
அதிருப்தியடைந்த மேயர் இந்திராணி, ''கவுன்சிலர்களுக்கு மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசவும், மற்ற கவுன்சிலர்கள் பேசுவதைக் கேட்கவும் 3 மணி நேரம் கூட மாநகராட்சி கூட்டத்தில் அமர பொறுமையில்லை. முன்பு பேச வாய்ப்பு கொடுக்கவில்லை என்றனர். தற்போது பேச வாய்ப்பு கொடுத்தாலும் கூட்டத்தில் அமர்ந்து மக்கள் பிரச்சனை பேசுவதில்லை,'' என்றார்.
அதற்கு பதில் அளித்து பேசிய 54வது வார்டு திமுக கவுன்சிலர் நூர்ஜஹான், ''அதிகாரிகளுக்கு கூட்டத்தின் இடையே அவர்கள் இருக்கையை தேடி டீ வருகிறது. ஆனால், கவுன்சிலர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஒரே இடத்தில் 3 மணி நேரம் அமரும்போது கவுன்சிலர்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். அதனால், டீ குடிக்க வெளியே போகலாம். அவசரத்திற்கு கூட வெளியே போகலாம்,'' என்றார். அதற்கு மேயர், ''அவசர அத்தியாவசியத்திற்கு யாரையும் வெளியே எழுந்து போகக்கூடாது என்று சொல்லவில்லையே, கூட்டத்திற்கு வராமலும், வந்துவிட்டு இருக்கையில் அமராமல் வீட்டிற்கு போகிறவர்களையும்தான் சொல்கிறேன்,'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT