Published : 28 Jul 2023 05:59 PM
Last Updated : 28 Jul 2023 05:59 PM
சென்னை: குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிப்பதில் எந்தத் தகுதி இழப்பும் இல்லை. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க, அரசியல் சட்டமோ, சட்ட விதிகளோ தடை செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்று தமிழக அரசு சார்பில், செந்தில் பாலாஜி வழக்கில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், "அரசியல் சட்ட பிரிவுகளையும், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி, அமைச்சரவையின் திருப்தி அடிப்படையில் மட்டுமே ஆளுநர் செயல்பட முடியும். அமைச்சரவைக்கு இணையாக நிர்வாகம் நடத்த ஆளுநருக்கு அரசியல் சட்டம் அதிகாரம் வழங்கவில்லை.
ஆளுநரோ, குடியரசு தலைவரோ அதிகாரத்தை தனிப்பட்ட முறையில் செயல்படுத்த முடியாது என்று அரசியல் சட்டம் கூறுகிறது. குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிப்பதில் எந்த தகுதி இழப்பும் இல்லை. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க, அரசியல் சட்டமோ, சட்ட விதிகளோ தடை செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேர்ந்தெடுத்த வாக்காளர்களால் நீக்க முடியாத மக்கள் பிரதிநிதியை, நீதிமன்ற வழக்கு மூலம் நீக்க முடியாது, என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்எல்ஏக்களை விட அமைச்சர்கள் குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர். எம்எல்ஏக்கள் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர். அமைச்சர்கள் 76 ஆயிரம் ரூபாய் தான் பெறுகின்றனர். இதனால், அவர்களுக்கு பயண சலுகைகள் உள்ளன.எனவே, இந்த ரிட் மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல. ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு விரோதமாக செயல்பட முடியாது. அவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது" என்று வாதிட்டார்.
அப்போது, எம்.எல்.ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக்திவேல், அமைச்சரவை ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்றாலும், சில விதிவிலக்குகள் உள்ளது. அதுபோன்ற சூழல் நிலவுகிறதா? இல்லையா? என்பதை பார்க்க வேண்டும். சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறி செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை விரும்பவில்லை என முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
அதேபோல், செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது. இந்த விவகாரத்தில் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு வராமல் ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசியல் சட்ட விதிகளின்படிதான் ஆளுநர் செயல்பட்டுள்ளார்" என்று வாதிட்டார்.
அப்போது ஜெயவர்த்தன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, "சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியால் அரசு பணியாற்ற முடியாது. எனவே அவர் அமைச்சராக நீடிக்க முடியுமா என்ற கேள்வி முதல் முறையாக எழுந்துள்ளது. தன் கண்முன் நடக்கும் சட்டவிரோதங்களை கண்டு, சட்ட அதிகாரம் இல்லை என ஆளுநர் இருக்க முடியாது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை விரும்பவில்லை என ஆளுநர் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பார் என முதல்வர் அறிவித்தார். ஆளுநரின் நம்பிக்கையை பெறாத நபர் அமைச்சராக நீடிக்க முடியாது" என வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT