Published : 28 Jul 2023 05:51 PM
Last Updated : 28 Jul 2023 05:51 PM
மதுரை: ராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போராட்டத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பான விசாரணை அறிக்கை தகவல்களை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த அலாவுதீன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'ராமநாதபுரத்தில் 17.2.2014-ல் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் போலீஸார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டனர். இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிசிஐடி ஐஜி விசாரணைக்கு உத்தரவிட்டது. ஐஜி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கை குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கீழ் சில தகவல்களை கேட்டு 20.7.2017-ல் மனு அனுப்பினேன். அந்த மனுவுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல் அளிப்பதிலிருந்து சிபிசிஐடிக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால் தகவல் வழங்க மறுத்து சிபிசிஐடி பொது தகவல் அலுவலர் உத்தரவிட்டார். இதை மேல்முறையீட்டு அலுவலரும் உறுதி செய்தார். மாநில தகவல் ஆணையரிடம் மேல்முறையீடு செய்தேன். அவர் என் மனுவை நிராகரித்து 10.5.2023ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து நான் கேட்ட தகவல்களை வழங்க உத்தரவிட வேண்டும்.' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: ''மனுதாரர் மனித உரிமை மீறல் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் சில தகவல்களை கேட்டு மனு அளித்துள்ளார். அந்த மனுவை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்குவதற்கு சிபிசிஐடிக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால் தகவல் வழங்க முடியாது என நேரடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. கேட்கப்பட்டிருக்கும் தகவல் ஊழல் குறித்ததா? அல்லது மனித உரிமை மீறல் குறித்ததா என்பதை பார்க்க வேண்டும்.
ஊழல் குறித்த தகவல் கேட்டிருந்தால் அது குறித்து பொது தகவல் அலுவலர் தகுதி அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்கலாம். மனித உரிமை குறித்ததாக இருந்தால் மனித உரிமை ஆணையத்திடம் அனுமதி பெற்ற தகவல் அளிக்கலாம். இந்த நடைமுறையை 45 நாளில் முடிக்க வேண்டும். இந்த நடைமுறை மனுதாரர் வழக்கில் பின்பற்றப்படவில்லை. மேல்முறையீட்டு அலுவலர் அனைத்திலும் தலையிட முடியாது. இதனால் மனுதாரர் கேட்ட தகவல்களை தர மறுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
தற்போது பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளியே தெரிவிக்க முடியாத முக்கிய தகவல்களை அளிக்க வேண்டியதில்லை. முக்கிய தகவல்கள் தவிர்த்து பிற தகவல்களை வழங்கலாம். அதன் அடிப்படையில் மனுதாரர் கேட்ட தகவல்களை பொது தகவல் அலுவலர் ஆகஸ்ட் 2-க்குள் வழங்க வேண்டும்'' என்றுநீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT