Published : 28 Jul 2023 03:34 PM
Last Updated : 28 Jul 2023 03:34 PM
புதுச்சேரி: “ஆளுநரின் சொல்லுக்கு தலையாட்டி பொம்மை போல முதல்வர் ரங்கசாமி செயல்படுகிறார். தமிழக பாடநூல் கழக நூல்களை எடுத்துவிட்டு சி.பி.எஸ்.இ நூல்களை தந்து தமிழினத்துக்கு ஆளுநர் தமிழிசை துரோக மிழைத்துள்ளார்” என்று தமிழக பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி கடுமையாக.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் அரியூரில் நடந்தது. தமிழக பாடநூல் கழக தலைவரும், திமுக பேச்சாளருமான திண்டுக்கல் லியோனி சிறப்புரையாற்றினார்.அவர் பேசியது: "உளுந்தே வாங்காமல் ஆயிரம் வடை சுடக்கூடிய திறமை பிரதமர் மோடியால் மட்டுமே முடியும்.
ஆளுநரின் சொல்லுக்கு தலையாட்டி பொம்மை போல முதல்வர் ரங்கசாமி செயல்படுகிறார். அவரைப்போல் நான் இருக்க மாட்டேன் என நிரூபித்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தை சேர்ந்த தமிழிசை தமிழக பாட நுால் கழகத்தின் நூல்களை எடுத்துவிட்டு சி.பி.எஸ்.இ நூல்களை கொடுத்துள்ளார். திருவள்ளுவருக்கும் தமிழுக்கும் அவ்வளவு தொண்டு செய்தவர் குமரி ஆனந்தன். அவரின் தொண்டுக்கு தமிழிசை துரோகம் செய்து வருகிறார். இந்த துரோகத்துக்கு முடிவு கட்ட புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைய வேண்டும். கடந்த 9 ஆண்டுகளாக பாஜக நாட்டை நாசமாக்கிவிட்டது. என்.டி.ஏ கூட்டணி துரோகிகளின் கூட்டணி இதற்கு மோடிதான் தலைவர்.
இந்தியா கூட்டணி நாடு முழுவதும் ஆட்சி அமைக்கும். அண்ணாமலையை கர்நாடகாவில் விரட்டி அடித்தது போல் தமிழ்நாட்டிலும் விரட்டியடிப்பார்கள். புதுச்சேரியில் நாடகம் நடத்தி ஆட்சி நடத்தும் என்.ஆர்.காங்கிரஸ் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சிக்கு முடிவு கட்டி புதுச்சேரியிலும் திமுக ஆட்சி அமைத்து திராவிட மாடல் ஆட்சி நடக்கும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெல்லும்" என்று குறிப்பிட்டார்.
கூட்டத்தில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான சிவா பேசும்போது, "ரங்கசாமி ஆட்சிக்கு வந்த பிறகு மாநில அந்தஸ்துக்கு அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இது டெல்லிக்கு சென்று பரிசீலனையில் இருப்பதாக நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் தீர்மானம் வரவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதன் மூலம் மக்களால் தேர்வான அரசை இதைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது.
மக்களால் தேர்வான அரசை ஆளுநர் தமிழிசை காலில் போட்டு மிதிக்கிறார். மாநில அந்தஸ்து தீர்மானத்தை தடுத்து நிறுத்தும் அதிகாரத்தை ஆளுநருக்கு தந்தது யார் என்ற கேள்வி எழுகிறது. ஆளுநர் மாளிகை நோக்கி மிகப்பெரிய போராட்டத்தை திமுக நடத்தும். மக்கள் உரிமையில் கைவைத்த ஆளுநர் மீது உரிமை மீறல் கொண்டு வருவோம்" என்றார். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொதுக் கூட்டத்தில் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், முன்னாள் எம்.பி., திருநாவுக்கரசு, எம்.எல்.ஏ-க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT