Published : 28 Jul 2023 05:16 AM
Last Updated : 28 Jul 2023 05:16 AM
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நகர்ப்புற பகுதிகளுக்கு 2-ம் கட்ட பதிவுக்கான விண்ணப்பங்கள் ஆக.1-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதையொட்டி, வரும் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்.15-ல் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் முதல்கட்டமாக கடந்த ஜூலை 24 முதல் 27-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, விண்ணப்ப பதிவு நடந்து வருகிறது.
ஆக.5 முதல் 16-ம் தேதி வரை 14,825 நியாவிலை கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு நடைபெற உள்ளது. இதற்காக வீடு வீடாக விண்ணப்பம் வழங்கும் பணி ஆக.1-ம் தேதி தொடங்குகிறது.
இதுதொடர்பாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடந்த கூட்டத்தில், கிராமப்புற பகுதிகளில் விண்ணப்பம், டோக்கன் விநியோகம் செய்யப்பட்டதில் இருந்த குறைபாடுகளை சரிசெய்து, நகர்ப்புற பகுதிகளில் விநியோகம் செய்வது தொடர்பாக புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, ஆக.1 முதல் 4-ம் தேதி வரை 4 நாட்களுக்கு முழுமையாக விண்ணப்பங்களை விநியோகம் செய்ய வேண்டும். எந்தெந்த பகுதிகளுக்கு எந்தெந்த நாட்களில் விண்ணப்பம், டோக்கன் வழங்கப்பட உள்ளது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு, அதன்படி விநியோகம் செய்ய வேண்டும்.
ஒரு நாளுக்கான 60 டோக்கன்களையும் ஒட்டுமொத்தமாக அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்யாமல், ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியாக பிரித்து டோக்கன் வழங்க வேண்டும். விண்ணப்பங்களில் குடும்ப அட்டை எண் தவறாமல் எழுதப்பட வேண்டும். முகாம் நடக்கும் நாள், நேரத்தை டோக்கனில் தெளிவாக குறிப்பிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கமாக முதல் 2 வெள்ளிக்கிழமைகள் நியாய விலை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அதற்கு பதிலாக, அந்த ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் இயங்கி வருகின்றன. தற்போது பல்வேறு பகுதிகளில் மகளிர் உரிமைத் தொகைக்கான முகாம்கள் நியாய விலை கடைகளுக்கு அருகில் நடக்கின்றன. இதையொட்டி, வரும் 30-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை நியாய விலை கடைகளுக்கு பணி நாளாக இருக்கும் என்று உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் வெ.ராஜாராமன் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT