Published : 28 Jul 2023 07:07 AM
Last Updated : 28 Jul 2023 07:07 AM

என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்காக 2-வது நாளாக கால்வாய் வெட்டும் பணி: 17 இடங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு

சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவி பகுதியில் என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்காக விளைநிலங்களில் கால்வாய் வெட்டும் பணி 2-வது நாளாக நேற்று நடைபெற்றது.

கடலூர்: என்எல்சி இந்தியா நிறுவனம் கையகப்படுத்திய விவசாய விளை நிலங்களில் 2-ம் சுரங்க விரிவாக்கத்துக்காக வாய்க்கால் வெட்டும் பணி 2-வது நாளாக நேற்றும் நடந்தது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக பரவனாற்றுக்கு என்எல்சி சுரங்க நீரை எடுத்துச் செல்லும் வகையில், நேற்று முன்தினம் காலை வளையமாதேவி பகுதியில் வாய்க்கால் வெட்டும் பணியை தொடங்கினர். இதில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் அழிக்கப்பட்டு, அதில் வாய்க்கால் வெட்டப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேத்தியாதோப்பு, விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் போராட்டம் நடத்திய பாமகவினர் கைது செய்யப்பட்டனர். என்எல்சிக்கு இடம் கையகப்படுத்துவதை எதிர்த்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன.

பண்ருட்டி, விருத்தாசலம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 17 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டுள்ளன. இதனால் நேற்று முன்தினம் இரவு ஒரு சில பேருந்துகள் இயக்கப்படாமல், பணிமனைக்கு சென்றன.

இந்நிலையில், வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் நேற்றும் இப்பணி தொடர்ந்து நடைபெற்றது. நேற்று முன்தினம் இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். கூடுதலாக 700-க்கும் மேற்பட்ட போலீஸார் கடலூர் மாவட்டத்துக்கு வந்தனர்.

சேத்தியாத்தோப்பு, வளையமாதேவி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம பகுதிகளில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு - விருத்தாசலம் சாலையில் வளையமாதேவி பகுதி வரை பல இடங்களில் பேரிகார்டுகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கிராம எல்லையிலும் தடுப்புகள் வைக்கப்பட்டு, வெளி நபர்கள் உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் தண்ணீர் பீச் அடிக்கும் இயந்திரம், தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றின் பாதுகாப்புடன் வாய்க்கால் வெட்டும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x