Published : 22 Jul 2014 12:00 AM
Last Updated : 22 Jul 2014 12:00 AM
தமிழகத்தில் கடுமையான குடிநீர் பிரச்சினை நிலவுவதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் புகார் கூறின.
தமிழகத்தின் சில பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் நிலத்தடி நீரின் அளவை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் திங்கள்கிழமை கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:
சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட்): தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மட்டுமே மழை குறைவாக உள்ளதாக அமைச்சர் கூறுகிறார். ஆனால், அந்த அளவுக்கு மழை பெய்ததற்கான அறிகுறியே பெரிய அளவில் எங்கும் தெரியவில்லை. பல பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விடப்படுகிறது.
சில இடங்களில் கால்நடைகளுக்குக்கூட காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை உள்ளது. சென்னையில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வருகிறது. அதுவும் நீரின் அழுத்தம் காரணமாக கழிவுநீர் கலந்து வருகிறது.
குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்): குடிநீரில் 200 முதல் 700 வரை டிடிஎஸ் (இரும்பு, உப்பு உள்ளிட்ட தாதுப் பொருட்கள் அளவு) இருந்தால் மட்டும் குடிப்பதற்கு உகந்ததாகக் கருதப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், சென்னை குடிநீர் வாரியமோ 1,700 டிடிஎஸ் வரை இருக்கலாம் என்று சொல்லி, பாதுகாப்பற்ற குடிநீரை விநியோகித்து வருகிறது.
அஸ்லம் பாஷா (மமக): மாநிலத்தின் பல பகுதிகளில் ஆயிரம் அடிக்கு கீழேகூட தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துகொண்டே போகிறது. தமிழகத்தில் உள்ள வீராணம் உள்ளிட்ட 25 ஏரிகளை ஆழப்படுத்துதல், சில ஆறு, ஏரிகளில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை தூர் வாருதல் போன்ற பணிகளை செய்தாலே 400 டிஎம்சி நீரை கூடுதலாக சேமிக்க முடியும்.
சக்கரபாணி (திமுக): திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
பார்த்திபன் (தேமுதிக): அரசு சார்பில் முன்பெல்லாம் மழைநீர் சேகரிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டது. சாலையோரங்களில்கூட மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால், இப்போது மழைநீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டது.
இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT