Published : 21 Nov 2017 09:30 AM
Last Updated : 21 Nov 2017 09:30 AM

‘லைக்’ போடவைக்கும் லெப்பைக்குடிக்காடு இளைஞர்கள்: உழைப்பால் உயர்ந்து ஊரையும் உயர்த்தியவர்கள்

பெ

ரம்பலூர் மாவட்டத்திலுள்ள லெப்பைக்குடிக்காடு எனும் ஊரை ‘குட்டி துபாய்’ என அழைக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். காரணம், வளைகுடா நாடுகளுக்குப் பிழைக்கப் போன இளைஞர்களால் இந்த ஊர் கண்டிருக்கும் வியத்தகு பொருளாதார வளர்ச்சி!

ஒரு காலத்தில், ஆரம்பக் கல்வியைக் கற்கக்கூட ஆர்வமில்லாமல் இருந்தனர் இந்த ஊர்ப் பிள்ளைகள். வீட்டுக்கு வீடு நிலவிய வறுமையும் அதற்கு முக்கியக் காரணம். பள்ளிக்கூடத்துக்குப் போகும் நேரத்தில் எங்காவது கூலி வேலைக்குப் போய் குடும்ப பாரத்தைத் தாங்க வேண்டிய கட்டாயத்தில் சிறுவர்களும் இருந்தார்கள். ஆனால் இப்போது, அந்த நிலையெல்லாம் மாறிவிட்டது. இப்போது இந்த ஊரில், மருத்துவம் படித்தவர்கள் மட்டுமே 50 பேருக்கும் மேல் இருக்கிறார்கள். பொறியாளர்கள் எண்ணிக்கை 500-ஐ தாண்டுகிறது. இத்தனை முன்னேற்றத்தையும் தந்தது, இந்த ஊர் இளைஞர்கள் வளை குடா நாடுகளில் உழைத்து ஈட்டிய வருவாயும், நற்பெயரும்.

வெற்றிலைக் கொடிக்கால்களை மட்டுமே நம்பியிருந்த இந்த மக்கள் கண்டிருக்கும் இந்த வியத்தகு பொருளாதார முன்னேற்றம் குறித்து விவரித்தார் ஓய்வு பெற்ற விவசாய அலுவலர் அப்துல் ஹாதி. “முஸ்லிம்கள் மிகப் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர் இது. முன்பெல்லால் எங்கள் ஊர் மக்கள் இங்கு விளையும் வெற்றிலையை உளுந்தூர்பேட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட ஊர்களுக்கு சுமந்து சென்று வியாபாரம் செய்வார்கள். ஒருகட்டத்தில், வெற்றிலை வியாபாரத்தில் போதிய வருமானம் இல்லாமல் போனதால் பல குடும்பங்கள் வறுமையில் சுருண்டன.

அத்தகைய சூழ்நிலையில் தான், அரபு நாட்டுக்குப் பிழைக்கப் போனால் நல்லா சம்பாத்தியம் கிடைக்கும் என்று எங்கள் ஊர் இளைஞர்கள் சிலர் கிளம்பினார்கள். பாஸ்போர்ட், விசா தேவை என்பதைக்கூட அறியாத அந்த இளைஞர்கள், துபாய் செல்வதற்காக 1963-ல் மும்பைக்குப் போனார்கள். அங்கிருந்த ஏஜென்ட்கள், அவர்களை படகு மூலமாக துபாய்க்கு அனுப்பி வைத்தார்கள். அப்படிப் போனதில் ஒரு படகு கவிழ்ந்து எங்கள் ஊரைச் சேர்ந்த 7 பையன்கள் இறந்து விட்டார்கள். அவர்களோடு சென்ற நான்கு பேர் மட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்து துபாய் போய் சேர்ந்துவிட்டார்கள். அந்த நான்கு பேர் போட்ட விதையில் தான் இன்றைக்கு இந்த ஊர் இத்தகைய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.

நாணயமாக உழைத்ததால்..

துபாய் சென்ற அந்த நான்கு பேரும் அங்குள்ள துறைமுகத்தில் சுமை தூக்கினார்கள். கடினமாக உழைத்து வருமானமும் நற்பெயரையும் சம்பாதித்த அவர்கள், இந்த ஊரைச் சேர்ந்த மேலும் பலரை துபாய்க்கு வரவழைத்து வேலை வாங்கிக் கொடுத்தனர். அப்படிப் போன அத்தனை பேருமே கடுமை யாகவும் நாணயமாகவும் உழைத்ததால் எங்கள் ஊர் இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதில் ஆர்வம் காட்டினார்கள் அரபு முதலாளிகள்.

இன்றைய தேதியில், துபாய் நகரில் மட்டுமே எங்கள் ஊரைச் சேர்ந்த சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பணி செய்கிறார்கள். இப்போது இவ்வூர் இளைஞர்கள் தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களையும் வேலைக்கு அழைத்து அதன் மூலமும் கூடுதல் வருமானம் பார்க்கிறார்கள்” என்று சொன்னார் அப்துல் ஹாதி.

வறுமையின் கொடுமை போக்க..

வறுமையின் கொடுமையை உணர்ந்த இவ்வூர் இளைஞர்கள், இங்கு வறுமையில் வாடும் நபர்களுக்கும் பல விதங்களில் கைகொடுக்கின்றனர். இதற்காகவே, லெப்பைக்குடிக்காடு வாலிபர் முன்னேற்ற சங்கம், இஸ்லாமிய பொது நிதியம் (பைத்துல்மால்) ஆகிய அமைப்புகளை வைத்திருக்கிறார்கள். இந்த அமைப்புகளுக்கு தங்களது வரு மானத்தில் ஒரு சிறு பகுதியை நன்கொடையாகத் தருகின்றனர் வளைகுடாவில் பொருளீட்டும் இளைஞர்கள். அந்த நிதியைக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு கல்வி க்கும், தொழிலுக்கும் உதவுகிறார்கள்.

மதுவுக்கு வேலையில்லை

இந்த ஊரின் போற்றவேண்டிய இன்னொரு சிறப்பு மதுக்கடைகள் ஒழிப்பு. மது வாசனையே தீண்டாத பேரூராட்சி எனும் சிறப்பு லெப்பைக்குடிக்காடுக்கு உண்டு. “தமிழக அரசின் தாராள மது கொள்கையால் எங்கள் ஊருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இந்த ஊருக்குள் யாரும் மதுக்கடைக்கு வாடகைக்குக்கூட இடம் கொடுக்கக் கூடாது என்பது ஜமாத்தில் எடுக்கப்பட்ட முடிவு. அந்த முடிவுக்கு இன்றுவரை ஊர்மக்கள் ஒத்துழைப்புத் தருகின்றனர்” என்று பெருமிதம் கொள் கிறார் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவரும் மேற்கு ஜும்மா பள்ளிவாசல் தலைவருமான சுல்தான் மொய்தீன்.

கடின உழைப்பால் தங்களையும் உயர்த்திக் கொண்டு தாங்கள் பிறந்த ஊரையும் செழிப்படைய வைத்திருக்கும் லெப்பைக்குடிக்காட்டு இளைஞர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்களே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x