Last Updated : 27 Jul, 2023 11:50 PM

1  

Published : 27 Jul 2023 11:50 PM
Last Updated : 27 Jul 2023 11:50 PM

திமுக உட்கட்சி பூசல் விஸ்வரூபம்: நெல்லை மாவட்ட பொறுப்பாளர் கொலை மிரட்டல் விடுத்ததாக கவுன்சிலர்கள் தர்ணா

 படங்கள் மு. லெட்சுமி அருண்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் திமுக உட்கட்சி பூசல் மீண்டும் விஸ்வரூபமாக வெளிப்பட்டது. மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்து மண்டல தலைவர்கள், பெண் கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்ட அரங்கில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் கோஷமிட்டனர். கூச்சல், குழப்பத்துக்கு இடையே கூட்டம் நடைபெற்று முடிந்தது.

திருநெல்வேலி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டங்கள் நேற்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக காலை 9.30 மணிக்கு வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இம்மாநகராட்சியில் 55 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் தேர்தலில் கலந்து கொண்டனர்.

44 திமுக உறுப்பினர்கள், 7 பேர் திமுக கூட்டணி உறுப்பினர்கள், 4 பேர் அதிமுக உறுபபினர்கள். வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழுவின் 9 உறுப்பினர்களுக்கான இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான 9 திமுக மாமன்ற உறுப்பினர்களை திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம் மைதீன்கான் முன்னதாக அறிவித்திருந்தார். ஆனால் அவர்களில் 3 பேர் திடீரென்று மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டதால் அவர்களுக்கு போட்டியாக 3 திமுக கவுன்சிலர்கள் களமிறங்கினர். இதனால் மொத்தம் 12 பேர் இந்த உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டனர்.

காலை 10.30 மணிக்குள் முடிய வேண்டிய தேர்தல் பகல் 12 மணிக்கு முடிவடைந்தது. இத்தேர்தலில் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அறிவித்த பாலம்மாள், ஆமீனாபீவி, ராஜேஸ்வரி ஆகிய 3 திமுக உறுப்பினர்களும் தோல்வியுற்றனர். அதேநேரம் திமுக பொறுப்பாளர் அறிவித்ததுக்கு எதிராக போட்டியிட்ட திமுக உறுப்பினர்கள் ரவீந்தர், பொன் மாணிக்கம், ஜெகநாதன் ஆகிய 3 பேரும் வெற்றிபெற்றனர்.

இத்தேர்தலுக்குப்பின் மாநகராட்சி கூட்டம் தொடங்கியது. கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் பி.எம். சரவணன் பேசும்போது, திருநெல்வேலி டவுன் ஆர்ச் பகுதியில் இருந்து குறுக்குத்துறை செல்லும் சாலைக்கு தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் பெயரை சூட்ட தமிழக முதன்மை செயலாளர் ஒப்புதல் அளித்துள்ளார். அது தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்படுவதாக தெரிவித்தார்.

அப்போது திமுக உறுப்பினர் சங்கர் உள்ளிட்ட கவுன்சிலர்கள், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பல்வேறு இடங்களில் அவதூறாக பேசிய நெல்லை கண்ணன் பெயரை சூட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அத்தீர்மானம் ஒத்திவைக்கப்படுவதாக மேயர் தெரிவித்தார். மற்ற தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து திருநெல்வேலி மண்டல தலைவர் மகேஸ்வரி பேசியதாவது: நடந்து முடிந்த வரிவிதிப்பு மேல்முறையீட்டு தேர்தல் தொடர்பாக நேற்று மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான், மண்டல சேர்மன்களை அழைத்து வரச் சொல்லி பேசி இருந்தார். அப்போது எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது அந்த இடத்தில் மேயர் மற்றும் துணை மேயர் இருந்தனர். அவர்கள் இதற்கு ஒன்றும் பதில் பேசாமல் இருந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அவரும், மற்ற மண்ட தலைவர்கள் ரேவதி (தச்சநல்லூர்), கதிஜா (மேலப்பாளையம்) மற்றும் சில பெண் உறுப்பினர்களும் கூட்ட அரங்கில் மேயர் இருக்கைக்குமுன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக திமுக கவுன்சிலர்கள் பலரும் மேயருக்கு எதிராக கோஷமிட்டனர். மேயரால் ஜனநாயகம் சீரழிந்துவிட்டதாகவும், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் திமுக கவுன்சிலர்கள் முழக்கமிட்டதால் அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

உட்கட்சி பிரச்சினையை மாநகராட்சி கூட்டத்தில் பேச வேண்டாம் என்றும் கட்சி அலுவலகத்தில் பேசுமாறும், மக்கள் பிரச்சினைகளை மாநகராட்சி கூட்டத்தில் பேசுமாறும் மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி கேட்டுக்கொண்டார். ஆனால் திமுக கவுன்சிலர்கள் சமாதானம் அடையவில்லை. கூச்சல் குழப்பம் நீடித்த நிலையில் இது குறித்து மேயர் பேசும்போது, "மத்திய மாவட்ட பொறுப்பாளர் வயதில் மூத்தவர். யாரையும் இங்கு விட்டுக்கொடுத்து, தவறாக பேசக்கூடாது. தவறான சிந்தனையில் அவர் எதையும் பேசவில்லை" என்று தெரிவித்தார். "இனிமேல் இந்த பிரச்சினை வராது" என்று துணை மேயர் கே.ஆர். ராஜு சமாதானம் செய்தார். ஆனாலும் திமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தை கைவிடவில்லை.

சிறிதுநேரத்துக்குப்பின் கூட்டம் முடிவடைந்ததாக தெரிவித்து மேயர், துணை மேயர், ஆணையர் ஆகியோர் அரங்கிலிருந்து சென்றனர். ஆனால் திமுக கவுன்சிலர்கள் தங்கள் இருக்கைகளில் தொடர்ந்து அமர்ந்து எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் அவர்கள் வெளியேவந்து செய்தியாளர்களிடம் கூறும்போது: வரிவிதிப்பு மேல்முறையீட்டு தேர்தலில் வெற்றிபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் மேயருக்கு எதிராக, மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான் செயல்பாட்டுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்தனர். "மணிப்பூர் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக முதல்வர் எங்களது பிரச்சினைகளையும் அறிவார். எனவே எங்களுக்கும் சரியான ஒரு முடிவு ஏற்படுத்தி கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்" என்று தெரிவித்தனர்.

இந்த கூச்சல் குழப்பத்துக்கு மத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன், குடிநீர், சாலை, கழிவு நீரோடை பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய கோரிக்கை அட்டையை தனது உடலில் தொங்கவிட்டபடி மாநகராட்சி கூட்டத்தில் வந்து ஆணையரிடம் முறையிட்டார். மேலும் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் மண்டல தலைவர், கவுன்சிலர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆணையரிடம் மனு அளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x