Published : 27 Jul 2023 11:27 PM
Last Updated : 27 Jul 2023 11:27 PM
மதுரை: ‘‘கே.பழனிசாமி முதல்வராக எப்போது மீண்டும் வருவார் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ என்று அதிமுக மாநாட்டுப் பணிகளை மதுரையில் பார்வையிட்ட அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாநில மாநாடு நடக்கிறது. நேற்று மாநாட்டு பணிகளை தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி, அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் பார்வையிட்டனர். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா மற்றும் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், டாக்டர் மணிகண்டன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதன்பின் அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மீண்டும் எப்போது முதல்வராக கே.பழனிசாமி ஆட்சிக்கு வருவார் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்டாலின், மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கே.பழனிசாமி எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், மணிப்பூர் சம்பவத்தில் ஆரம்பத்திலேயே கே.பழனிசாமி விரிவான அறிக்கை வெளியிட்டார். அதில் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும், அங்கு இருக்கும் தமிழர்களை கண்டறிந்து, அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கும், முதல்ருக்கும் வலியுறுத்தினார். அதன்பின் மீண்டும் அறிக்கை வெளியிட்டார்.
உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இதுவெல்லாம் தெரியாதா? ஜெயலலிதாவை போல் துணிச்சலுடன் கண்டன அறிக்கையை கே.பழனிசாமி வெளியிட்டு வருகிறார். தமிழகத்தில் எவ்வளவு பிரச்சினை நடைபெற்று வருகிறது. அதைப்பற்றி ஸ்டாலின் பேசவில்லை கண்டு கொள்ளவில்லை. மேலும், எங்களை அடிமை என்று பேசி உள்ளார். நாங்கள் மத்திய அரசுக்கு அடிமை இல்லை. தமிழக மக்களுக்காக கே.பழனிசாமி குரல் கொடுத்து வருகிறார்.
திமுக கூட்டணி கட்சிகள்தான் திமுகவுக்கு அடிமையாக உள்ளது. வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் திமுகவை எதிர்த்து பேசவில்லை. இன்றைக்கு திமுக கூட்டணி கட்சிகள் திமுகவின் முழுமையாக அடிமையாக மாறிவிட்டார்கள். மக்களுக்காக அவர்கள் குரல் கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT