Last Updated : 28 Jul, 2023 12:59 AM

 

Published : 28 Jul 2023 12:59 AM
Last Updated : 28 Jul 2023 12:59 AM

மகளிர் உரிமைத் தொகைக்கு வங்கி கணக்கு தொடங்க அஞ்சல் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு

கோவை: தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என்பதால், தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை மண்டல அஞ்சலக அதிகாரிகள் கூறியதாவது: தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், பயனாளிகள் தங்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை மட்டும் பயன்படுத்தி e-KYC (விரல் ரேகை மூலம்) மூலம் ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க முடியும்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, அஞ்சல்துறையின் கீழ் இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான வங்கியாகும். இங்கு தொடங்கும் கணக்கிற்கு இருப்பு தொகை எதுவும் கிடையாது (Zero Balance Account). மகளிர் உரிமை தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமை தொகையை, அருகில் உள்ள அஞ்சலகங்களிலும், டோர் ஸ்டெப் பேங்கிங் என்ற சிறப்பு சேவை மூலமும் தங்கள் இல்லத்திலேயே தபால்காரர் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் மட்டுமில்லாமல், நூறு நாள் வேலைத்திட்ட பயனாளிகள், பிரதம மந்திரி கிசான் திட்ட பயனாளிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை, பெறும் பயனாளிகளும் இந்தியா போஸ்ட்பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கி பயன் பெறலாம்.

எனவே, கோவை மாவட்டத்தின் பயனாளிகள் மாவட்டத்திலுள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை பயன்படுத்தி, வங்கி கணக்கு தொடங்கி பயனடையலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x