Published : 27 Jul 2023 09:32 PM
Last Updated : 27 Jul 2023 09:32 PM

மருத்துவப் படிப்புகள் | 7.5% ஒதுக்கீட்டில் 622 இடங்கள் நிரப்பப்பட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

2023-24 ஆம் கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை: அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5% சிறப்பு உள் ஒதுக்கீட்டுக்கு 1398 மாணவ மாணவியர்கள் மருத்துவக் கல்வி கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு 622 இடங்கள் நிரப்பபட்டது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) படிப்புக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5% உள் இட ஒதுக்கீடு ஆணை மற்றும் சிறப்புப் பிரிவு மாணவர்கள் ஒதுக்கீடுக்கான ஆணைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை வழங்கினார். முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.

7.5% உள் சிறப்பு ஒதுக்கீடு: பின்னர் இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது: "2023 – 2024 ம் கல்வி ஆண்டின் மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளுக்கான 7.5% அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களின் உள் சிறப்பு ஒதுக்கீட்டுக்கு 3042 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2993 ஆகும். இவற்றுள் 901 ஆண் மற்றும் 2092 பெண் விண்ணப்பதாரர்கள் அடங்குவர்.

மேலும் விளையாட்டு பிரிவுக்கு 179 விண்ணப்பங்கள் பெறப்பட்டன அவற்றுள் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 114 ஆகும். மேலும், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டுக்கு 401 விண்ணப்பங்கள் பெறப்பட்டன, அவற்றுள் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 328 ஆகும். மேலும், மாற்றுதிறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவுக்கு 98 விண்ணப்பங்கள் பெறப்பட்டன அவற்றுள் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 80 ஆகும்.

இந்த சிறப்பு பிரிவுகளுக்கான நேரடி கலந்தாய்வு கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்று முடிந்துள்ளது. 7.5% ஒதுக்கீட்டுக்கான அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்தம் 486 MBBS இடங்களும் 136 BDS இடங்கள் என மொத்தம் 622 இடங்கள் உள்ளன. இந்த 7.5% அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களின் சிறப்பு உள் ஒதுக்கீட்டுக்கு 1398 மாணவ மாணவியர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு 622 இடங்கள் நிரப்பபட்டது.

மேலும் விளையாட்டு பிரிவுக்கு 25 மாணவ மாணவியர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு 8 இடங்களும், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டுக்கு 25 மாணவ மாணவியர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு 11 இடங்களும் மற்றும் மாற்றுதிறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவுக்கு 80 மாணவ மாணவியர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு 78 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.

தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 2023-2024ம் கல்வி ஆண்டில் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ (MD/MS/DIPLOMA, DNB & MDS) பட்டப்படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள் மற்றும் நிர்வாக இடங்கள் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கைக்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க 06/07/2023 அன்று செய்தித்தாள் மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டு 06/07/2023 முதல் 17/07/2023 மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மேலும், வரவேற்கப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கப்பட்டு இன்று (ஜூலை 27) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

MD/MS/DIPLOMA அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஓதுக்கீட்டுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் (PG Government Quota)-வுக்கு 8376 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 7526 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், MD/MS/DIPLOMA அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஓதுக்கீட்டுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் (PG Management Quota)-வுக்கு 3688 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 3036 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், MDS அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஓதுக்கீட்டுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் (MDS Government Quota) வின் கீழ் 779 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 661 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மேலும், MDS சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஓதுக்கீட்டுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் (MDS Management Quota) கீழ் 446 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 336 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. DNB Government Quota அரசு ஒதுக்கீட்டின் கீழ் 676 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 499 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ (MD/MS/DIPLOMA, DNB & MDS) பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு 05/08/2023 அன்று முதல் ஆன்லைன் வழியாக நடைபெறும். பிற தகவல்களுக்கு மாணவர்கள் tnmedicalselection.net மற்றும் tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஆகஸ்ட் 14ல் கலந்தாய்வு: மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பில் B.sc Nursing, B.Pharm, BPT என்று 19 வகையான 4 வருட பட்டப்படிப்புகளுக்கு 18-06-2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு, 19-06-2023 முதல் 10-07-2023 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, மொத்தம் 66,696 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி முடிவடைந்து தரவரிசைப்பட்டியல் இன்று (ஜூலை 27) வெளியிடப்படுகிறது. ஆகஸ்ட் 14, அன்று கலந்தாய்வு தொடங்கும்.

அதை தொடர்ந்து மற்ற பட்டய படிப்புகளான Pharm.D, Diploma in Nursing, 17-07-2023 முதல் 26-07-2023 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மற்றும் B.Pharm Lateral Entry, Post Basic Nursing, Diploma. Certificate படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் விரைவில் விண்ணப்பங்கள் கோரப்படும். இதற்கான கலந்தாய்வு செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்படும். பிற தகவல்களுக்கு மாணவர்கள் tnmedicalselection.net மற்றும் tnhealth.tn.gov.in இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x