Published : 27 Jul 2023 06:14 PM
Last Updated : 27 Jul 2023 06:14 PM
புதுச்சேரி: புதுச்சேரி காவல் துறை அதிகாரிகளுடன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று ஆலோசனை நடத்தினார். காவல் துறை தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் டிஜிபி ஸ்ரீநிவாஸ், சீனியர் எஸ்பிக்கள் பிரிஜேந்திர குமார் யாதவ், நாரா.சைதன்யா மற்றும் எஸ்பிக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியது: "சட்டம் -ஒழுங்கை கட்டுக்குள் வைப்பது, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது, சைபர் குற்றங்களை தடுப்பது, போதை பொருள் தடுப்பு, காவலர் நலன், காவல் துறையினை நவீனப்படுத்துவது, பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புவது, நிதிநிலை அறிக்கையில் முதல்வர் அறிவித்த அறிவிப்புகள், மானிய கோரிக்கையின் போது நான் அறிவித்த அறிவிப்புகள், சட்டமன்றத்தில் எம்எல்ஏக்கள் எழுப்பிய கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது. குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கையை எடுக்க வேண்டும். குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். இரவு நேர ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும். எந்தெந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதோ, அந்த பகுதியில் காவலர்களை பணியமர்த்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும்.
வெகுவிரைவில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. காவ ல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் வரும் 7, 8 தேதிகளில் புதுச்சேரிக்கு வருகை தரவுள்ளார். இதற்குரிய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை அதிகாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் குடியரசு தலைவர் பங்கேற்கும் விழாக்கள் குறித்த முழு விவரம் அங்கிருந்து வரவில்லை. காவல் நிலையங்களில் ரூ.4 கோடி மதிப்பில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தவும் டெண்டர் விடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் உழவர்கரை நகராட்சி, அரியாங்குப்பம் கொம்யூன், வில்லியனூர் கொம்யூனுக்கு உட்பட்ட பகுதிகளிலும் சிசிடிவி கேமிரா வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன். காவலர்களின் ரோந்து பணிக்கான வாகன எரிபொருள்படி தொகை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களில் 80 பேர் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். இது போதுமானதாக இருக்காது. எனவே, கூடுதலான காவலர்கள் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியில் நியமிக்க வேண்டும் என டிஜிபியிடம் கூறியுள்ளேன்.
போக்குவரத்து போலீஸார் ஒருவர் வாகன சோதனையின்போது, முறைகேடாக அபராதத் தொகையை உறவினரின் ஜிபேவுக்கு அனுப்பியதாக வந்த புகார் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுபோல் எந்த புகார் வந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.
தொடர்ந்து அவரிடம் காமாட்சி அம்மன் கோயில் நில அபகரிப்பு வழக்கில் பாஜக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கையை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருவது தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது, "இந்த வழக்கின் தன்மையை பொருத்துதான் நடவடிக்கை எடுக்க முடியும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. உரிய ஆதாரங்கள் இருந்ததால் தான் நடவடிக்கை எடுக்க முடியும். யாராக இருந்தாலும் சட்டத்தின் அடிப்படையில் நிச்சயமாக நடவடிக்கை எடுப்படும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT