Published : 27 Jul 2023 05:55 PM
Last Updated : 27 Jul 2023 05:55 PM
மதுரை: திமுகவினர் மீதான 2-வது ஊழல் பட்டியல் வெளியிட்டபோது ஆளுநரிடம் தான் வழங்கிய இரும்புப் பெட்டியில் தமிழக அமைச்சர்கள் 6 பேரின் பினாமிகள் மற்றும் அவர்களின் சொத்துப் பட்டியல் உள்ளன என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விவரித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''நெய்வேலி என்எல்சி விரிவாக்கத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும்போது, அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்களை அழித்து நிலங்களை கையகப்படுத்துவதை ஏற்க முடியாது. இதற்காக என்எல்சி அதிகாரியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பாஜக சார்பில் கண்டனத்தை பதிவு செய்துள்ளேன்.
என்எல்சி விரிவாக்கத்தை நிறுத்த முடியாது. விரிவாக்கத்தால் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேநேரத்தில் சட்டத்தில் கூறப்பட்டுள்ள முறைப்படி நிலங்களை கையகப்படுத்த வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இதுதான் ஆக்கபூர்வமான தீர்வாக இருக்கும். இதை அரசியலாக்குவதால் தீர்வு கிடைக்காது.
திமுகவினரின் 2-வது சொத்து பட்டியல் ஆளுநரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அப்போது ஆளுநரிடம் அளித்த இரும்புப் பெட்டியில் தமிழக அமைச்சர்கள் 6 பேரின் பினாமிகள் மற்றும் அவர்களின் சொத்துப் பட்டியல் உள்ளன. அந்த 6 அமைச்சர்களின் பெயர்களை வெளியிடுவதை விட அவர்களின் பினாமிகள் மீது நடவடிக்கை எடுத்தால் தமிழகம் ஊழல் இல்லாத மாநிலமாக மாறும். நாங்கள் ஆளுநரை நம்புகிறோம். அவர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஏற்கெனவே பாஜக சார்பில் திமுக அரசின் மீது 6 ஊழல் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இப்போது தெரிவிக்கப்பட்டுள்ள 3 ஊழல் தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கப்படும்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொட்டுப்பார், சீண்டிப்பார் என பேசியதற்கு, அவரை குறை சொல்ல முடியாது. அவருக்கு பேச்சு எழுதிக் கொடுப்பவரைதான் குறை சொல்ல வேண்டும். அமைச்சர் பொன்முடி ரூ.40 கோடிக்கு மேல் வைப்பு நிதி மற்றும் வெளிநாட்டு பணம் வைத்திருப்பதாக அமலாக்கத் துறை சொல்லியுள்ளது. இதற்கு முதல்வர் விளக்கம் அளித்திருக்க வேண்டும். அதற்கு துணிவு இல்லாமல் யாரோ எழுதி கொடுத்ததை வைத்து சீண்டிப்பார், தொட்டுப்பார் என பேசுவது முதல்வர் பதவிக்கு அழகல்ல.
அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளின் நடவடிக்கையால் திமுகவினர் கோபத்தை பாஜகவினர் மீது தான் திருப்புவார்கள். பாஜகவினரை கைது செய்வார்கள். அதை எதிர்கொள்ள பாஜக தயாராக இருக்கிறது. அதற்காக ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை பாஜக கைவிடாது.
மணிப்பூரில் 2 பழங்குடியினர் இடையே சண்டை நடைபெறுகிறது. இதற்கான தீர்வு மணிப்பூருக்குள்தான் இருக்கிறது. மணிப்பூருக்கு வெளியே இருந்து தீர்வு காண முடியாது. அதை மணிப்பூர் மக்கள் ஏற்கவும் மாட்டார்கள். மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும். மணிப்பூர் விவகாரத்துக்கு நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார். இதில் எதிர்கட்சிகள் அரசியல் செய்வது நல்லது அல்ல. திமுகஃ பைல்ஸ் போல் அதிமுக ஃபைல்ஸ் எப்போது வெளியிடப்படும் என்பது தொடர்பாக வருங்காலத்தில் பேசுவோம்'' என்று அண்ணாமலை கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT