Published : 27 Jul 2023 03:26 PM
Last Updated : 27 Jul 2023 03:26 PM

மணிப்பூர் கொடூரம் | “நாடாளுமன்றத்தில் தப்பினாலும் மக்கள் மன்றத்தில் பிரதமர் மோடி தப்ப முடியாது” - கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி | கோப்புப்படம்

சென்னை: "மணிப்பூர் கலவரத்தின்போது அப்பாவி பெண்களுக்கு எதிராக நடக்கிற வன்கொடுமைக்கும், தாக்குதலுக்கும் நாடாளுமன்றத்தில் பதில் சொல்லாமல் பிரதமர் மோடி தப்பித்தாலும், மக்கள் மன்றத்துக்குப் பதில் சொல்லாமல் தப்ப முடியாது" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபோது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத நடவடிக்கைகளான பணமதிப்பிழப்பு, மூன்று வேளாண் சட்டங்கள் நிறைவேற்றம், கரோனா காலத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாமல் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, தவறான ஜிஎஸ்டி அமலாக்கம், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக அமலாக்கத்துறையைப் பயன்படுத்துதல் என தொடர்ந்து கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய தொழில்நுட்ப கழகம், இந்திய மேலாண்மை கழகம், தேசிய தொழில்நுட்ப கழகம் போன்ற மத்திய அரசின் கல்வி நிலையங்களில் பட்டியலினத்தவர்கள், பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்த 8 ஆயிரம் மாணவர்கள் படிப்பைத் தொடர முடியாமல் இடையில் வெளியேறியிருக்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.

நேற்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் அளித்த பதிலில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பட்டியலினத்தைச் சார்ந்த மாணவர்கள் 2019 இல் 186, 2020 இல் 287, 2021 இல் 318, 2022 இல் 229 மாணவர்கள் படிப்பைத் தொடர முடியாமல் இடை நிறுத்தல் ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதேபோல, மற்ற மத்திய கல்வி நிறுவனங்களிலும் இடை நிறுத்தலின் புள்ளி விவரங்கள் வெளிவந்துள்ளன.

மேலும், இதே காலகட்டத்தில் பட்டியலினம் மற்றும் பின்தங்கிய சமுதாயத்தைச் சார்ந்த 33 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அமைச்சரின் புள்ளி விவரம் உறுதிப்படுத்துகிறது. மத்திய பாஜக அரசின் கல்வி நிறுவனங்களில் இடை நிறுத்தலும், தற்கொலைகளும் ஏன் நிகழ்கிறது ? எதற்காக நிகழ்த்தப்படுகிறது ? குறிப்பாக பட்டியலின மாணவர்களுக்கு எதிராக மத்திய கல்வி நிறுவனங்களில் வன்கொடுமை நிகழ்த்தப்படுவதால் இத்தகைய இடை நிறுத்தலும், தற்கொலைகளும் நிகழ்வதாகக் கூறப்படுகிறது. இது பாஜக ஆட்சியில் அதிகரித்து வருவது மிகுந்த கவலையைத் தருகிறது.

அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் மூன்றாவது பொருளாதார வளம் மிக்க நாடாக இந்தியா உயரும் என்று நேற்று பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காகக் கூட்டுவேன், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன், எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுப்பேன் என்று கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

குறிப்பாக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிற வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற உத்தரவாதத்தைப் பறிக்கிற வகையில் மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இதை எதிர்த்து தலைநகர் டெல்லி எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராடினார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். அவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு மோடி தயாராக இல்லை.

கடந்த 80 நாட்களாக மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. நாள்தோறும் அப்பாவி இளம் பெண்கள் துப்பாக்கி முனையில் நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். இதுவரை சுதந்திர இந்தியா காணாத பாலியல் கூட்டுப் பலாத்காரம் மணிப்பூர் சகோதரிகளுக்கு எதிராக நிகழ்ந்து வருகிறது. இதை சமூக ஊடகங்களில் பார்க்கிற நாட்டு மக்கள் எதிர்கொள்கிற மனவேதனைக்கும், மன உளைச்சலுக்கும் அளவே இருக்க முடியாது. மணிப்பூர் சகோதரிகளுக்காக நாடே இன்றைக்குக் கண்ணீர் வடிக்கிறது. இவர்களுக்குப் பாதுகாப்பு வழங்காத பிரதமர் மோடி ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் ரோம் நகரம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிற போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததற்கு ஒப்பாக பிரதமர் மோடி வாய்மூடி மவுனியாக இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதில் சொல்லத் தயாராக இல்லை. ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரியாக இருக்கிறார்.

குஜராத்தில் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதைத் தடுக்க தவறிய மோடியும், அமித்ஷாவும் இன்றைக்கு பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருக்கிறார்கள். ஆனால், மணிப்பூர் கலவரத்தின் போது அப்பாவி பெண்களுக்கு எதிராக நடக்கிற வன்கொடுமைக்கும், தாக்குதலுக்கும் நாடாளுமன்றத்தில் பதில் சொல்லாமல் மோடி தப்பித்தாலும், மக்கள் மன்றத்துக்குப் பதில் சொல்லாமல் தப்ப முடியாது. வினை விதைத்த பிரதமர் மோடி வினை அறுக்கத்தான் போகிறார்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x