Published : 27 Jul 2023 02:29 PM
Last Updated : 27 Jul 2023 02:29 PM

போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் @ ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை: அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி அரசுப் பேருந்து வழித்தடத்தை பாணாவரம் வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டு பாணாவரம் ஊராட்சி உள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த மகேந்திர வாடி, குப்புக்கல் மேடு, கூத்தம்பாக்கம் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தமக்கள் மருத்துவமனை, ரயில் நிலையம், தபால் நிலையத்துக்கு செல்ல வேண்டும் என்றால் பாணாவரம் தான் வரவேண்டும்.

இப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகள் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் தினசரி கல்வி பயில பாணாவரம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல அரசுப் பேருந்தையே நம்பியுள்ளனர். ஆனால், பள்ளி நேரத்தில் அரக் கோணத்தில் இருந்து இந்த வழித் தடத்தில் குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

குறிப்பாக, மாலை நேரத்தில் T6 என்ற பேருந்து பாணாவரத்தில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்படுகிறது. இந்த ஒரே ஒரு பேருந்து மட்டுமே மாலையிலும் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில்தான் பள்ளி மாணவர்கள் உட்பட பொதுமக்களும் வீடு திரும்பவேண்டும். அதனால் பேருந்தை தவறவிட்டுவிட்டால் வேறுபேருந்து இல்லை என்பதால் இந்த பேருந்திலேயே சென்று விடவேண்டும் என பொதுமக்களும், மாணவர்களும் படியில் தொங்கியவாறு ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.

அதேசமயம் காஞ்சிபுரத்தில் இருந்து பனப்பாக்கம்-கர்ணாவூர் வரை மாலை 4 மணியளவில் T3A என்ற பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தை பாணாவரம் வரை நீட்டிக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பேருந்தின் வழித்தடத்தை பாணாவரம் வரை நீட்டித்தால் இதன் மூலமாக மாணவர்கள், பொதுமக்கள் நெரிசலின்றி பயணம் செய்ய ஏதுவாக இருக்கும்.

குறிப்பிட்ட நேரத்துக்கு மாணவர்கள், பொதுமக்கள் வீடு திரும்ப வசதியாக இருக்கும். இப்பகுதி மக்களின் நலன் கருதி போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, "காஞ்சிபுரத்தில் இருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்தின் வழித்தடத்தை நீட்டிக்க பொதுமக்கள் தரப்பில் காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டல அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தால், அதுகுறித்து ஆய்வு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்" என்றனர்.

இது குறித்து காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டல வணிக பிரிவு அதிகாரியை பலமுறை தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x