Published : 27 Jul 2023 11:58 AM
Last Updated : 27 Jul 2023 11:58 AM
சென்னை: சென்னையில், மாநகராட்சி சார்பாக 800-க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பெரும்பாலும் வெளியூரில் இருந்து வந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் மாநகராட்சியின் முக்கியமான பகுதிகளிலும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருப்பதால், பொது மக்களுக்கு உதவிகரமாகவும் இருக்கின்றன. இவற்றில் தற்போது சுமார் 300 கழிப்பறைகள் சேதமடைந்த நிலையிலும், மறுசீரமைக்கப்பட்டும் வருகின்றன. மீதமுள்ள 500 கழிப்பறைகள் தினசரி பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
இந்நிலையில் அடுத்தக்கட்டமாக மாநகராட்சி சார்பில் மேம்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் கழிப்பறைகளை, சென்னையில் முக்கிய சாலையோரங்களிலும், பேருந்து நிலையங்கள் போன்ற பகுதிகளிலும் அமைத்தது. ஆனால் இவை நகரவாசிகளிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை. மேலும் இவை அடிக்கடி பழுதடைந்து வந்த நிலையில், தற்போது சென்னையில் வெறும் 60 எலக்ட்ரானிக் கழிப்பறைகள் மட்டுமே செயல்பட்டு கொண்டிருக்கின்றன.
இதையடுத்து மக்களுக்கு இடவசதியுடன் கூடிய புதிய ஒப்பனை அறைகளை மாநகரம் முழுவதும் அமைக்க கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருந்தது. அதன்படி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.51.08 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகரில் ஒப்பனை அறைகளை கட்ட கடந்த ஆண்டு மார்ச் மாதம் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. அந்த வகையில் இதுவரை சென்னை மாநகராட்சி பகுதிகளில் 250 புதிய ஒப்பனை அறைகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த கழிப்பறைகளுக்கு வரவேற்பு அளித்துள்ள நகரவாசிகள், இதேபோல் சென்னையில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வரும் பொது கழிப்பிடங்களிலும் வசதிகளை மேம்படுத்தவும் முறையாக பராமரிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவல்லிக்கேணி லாக் நகரை சேர்ந்த சுரேஷ்: ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் நான், பெரும்பாலான நேரங்களில் பொதுக் கழிப்பிடத்தை தான் பயன்படுத்தி வருகிறேன். சென்னையில் சில இடங்களில் உள்ள கழிப்பறைகள் தொடர்ந்து அசுத்தமாகவும், பராமரிப்பின்றியும் உள்ளன. குறிப்பாக இந்தியன் கழிப்பறைகளை விட, மேற்கத்திய கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன.
மேலும் சில கழிப்பறைகளில் வற்புறுத்தி கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. மேலும், ஏற்கெனவே உள்ள பொதுக் கழிப்பிடங்களை சுத்தமாக வைத்திருக்கவும் அறிவுறுத்த வேண்டும். மயிலாப்பூர் சந்திரன்: சென்னையில் பெரும்பாலான இடங்களில் கழிப்பறைகள் அமைக்கப் பட்டுள்ளதால், வெளியூரில் இருந்து வந்து செல்வோருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகவும்பயன்பட்டு வருகிறது.
இருப்பினும் சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளன. தண்ணீர் வசதி இருந்தால் பயனுள்ளதாக இருக்கும். புதிதாக கட்டப்பட்டுள்ள, ஒப்பனை அறைகள் மிகவும் சுத்தமாகவும், மக்களுக்கு பயன்படும் வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலை அப்படியே தொடருமானால் மகிழ்ச்சி.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: எலக்ட்ரானிக் கழிப்பறைகள் தொடர்ந்து பழுதடைவதால், பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளன. பொதுவாகவே கழிப்பறைகளை பயன்படுத்திசெல்லும் மக்கள் தண்ணீர் விடாமல்செல்வதே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணமாகும். எனவே இதற்குமேல் எலக்ட்ரானிக் கழிப்பறைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை.
வீடுகளில் நாம் கழிப்பறைகளை எப்படி பயன்படுத்து கின்றோமோ, அதேபோல தான் பொது கழிப்பிடங்களையும் நாம் பயன்படுத்த வேண்டும். ஆனால் யாரும் அவ்வாறு செய்வதில்லை. அக்கறை காட்ட தயாராகவும் இல்லை. கழிப்பறைகளை சுத்தம் செய்யும் ஊழியர்களும் நம்போல் மனிதர்கள் தானே. அதேபோல் சென்னையில் பயன்படுத்தப்படும் பொதுக் கழிப்பறைகள் அனைத்தும் 100 சதவீதம் இலவசமாக செயல்படுகின்றன.
இவற்றுக்கு கட்டணம் கிடையாது. எங்கேயாவது கட்டணம் பெறப்பட்டால், உடனடியாக மாநகராட்சியின் 1913 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம். மேலும் சில இடங்களில் நிலவும் தண்ணீர் பிரச்சினைகள் மோட்டார்கள் பழுதடைவதால் ஏற்படுகிறது. அவையும் உடனுக்குடன் சரிசெய்யப்படுகின்றன. கழிப்பறைகளில் தண்ணீர் தட்டுப்பாடு இருந்தாலும், இதே எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தற்போது கட்டப்பட்டிருக்கும் ஒப்பனை அறைகளில் சிலவற்றில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால், சில இடங்களில் மூடிவைக்கப்பட்டுள்ளன. இவைகளும் ஓரிரு வாரங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும். அதைத்தொடர்ந்து மேலும் 500 இடங்களில் புதிதாக ஒப்பனை அறைகளை அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் பூந்தமல்லி, அண்ணாசாலை போன்ற நெடுஞ்சாலைகளில் தற்போதைக்கு கழிப்பறைகளை அமைக்கும் சூழ்நிலை இல்லை. அங்கு நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற்ற பின், செயல்படுத்தப்படும். 500 மீட்டருக்கு ஒரு கழிப்பறையை மாநகரில் அமைக்க வேண்டும் என்பதே தற்போதைய திட்டமாகும். மேலும் கழிப்பறை ஊழியர்கள் சிலர், சுத்தம் செய்வதற்கான பொருட்கள் வழங்கப்படுவதில்லை என கூறுகின்றனர்.
பொது கழிப்பறைகள் தொடர்பாக, ஒப்பந்ததார்களிடம் இதற்கென 7 கட்டுப்பாடு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளன. இது குறித்தும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். வீட்டு கழிப்பறைகளை போல பொது கழிப்பிடங்களையும் பயன்படுத்த வேண்டும். ஆனால் யாரும் அவ்வாறு செய்வதில்லை. சுத்தம் செய்யும் ஊழியர்களும் நம்போல் மனிதர்கள் தானே..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT