Published : 27 Jul 2023 04:57 AM
Last Updated : 27 Jul 2023 04:57 AM
திருச்சி: மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தவே 26 கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளதாக திருச்சியில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்களை சேர்ந்த திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் நேற்று நடைபெற்றது.
மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: டெல்டாவில் உள்ள கட்சியின் 15 மாவட்டங்களில் இருந்து 12,645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பல கட்ட ஆய்வுக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் அனைவரும் தேர்தல் பணிக்கென தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி, 10 பேரை சந்திக்க வேண்டும். இதனால், ஒரு மாதத்தில் உங்கள் வாக்குச்சாவடி வாக்காளர்கள் அனைவரையும் சந்தித்துவிடலாம்.
வாக்காளர்கள் ஒருவேளை உங்களை புறக்கணித்தாலும், தொடர்ந்து புன்னகையுடன் அவர்களை சந்தித்து, திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள், செயல்பாடுகள், தேர்தல் நடைமுறைகளை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, போலி நபர்கள், இறந்தவர்களின் பெயரை அடையாளம் கண்டு நீக்க வேண்டும். இந்த தேர்தலில் வெற்றி ஒன்றே உங்கள் இலக்காக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வாக்காளர்களின் குடும்ப விவரங்களை அறிந்து, அவர்களுக்கு தேவையான அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் தெரிவிக்கும் தகுதி வாய்ந்த கோரிக்கைகளை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கட்டாயம் நிறைவேற்றி தர வேண்டும். யாரும் குறைகூற முடியாத நல்லாட்சியை வழங்கி வருகிறோம்.
வீண் வம்பு வேண்டாம்: நீங்கள் அனைவரும் சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்கி, அதில் ஆக்கப்பூர்வமான விதத்தில் நமது ஆட்சியின் செயல்பாடுகள், கட்சியின் கொள்கைகள் குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டும். வீண் வம்புகளில் ஈடுபடக் கூடாது. நமக்கு சாதகமாக பிரச்சாரம் செய்ய இங்கே ஆளுநர் இருக்கிறார். வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை அவர் இங்கேயே ஆளுநராக இருந்து நமது வெற்றிக்கு வலு சேர்க்க வேண்டும் என விரும்புகிறேன்.
நாட்டின் ஜனநாயக கட்டமைப்புகளை மத்திய பாஜக அரசு சிதைத்துவிட்டது. இன்னொரு முறை அந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் மக்களாட்சி அமைப்புகளே இருக்காது.
எனவே, வர உள்ள மக்களவைதேர்தலில் பாஜக கட்டாயம் வீழ்த்தப்பட வேண்டும். அதற்காகத்தான் 26 கட்சிகள் சேர்ந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளோம். இந்த கூட்டணியை பிரதமர் மோடியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போகும் இடமெல்லாம் நம்மை பற்றி வாரிசு அரசியல் என விமர்சிக்கிறார். ஆம், நாங்கள் ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிட வாரிசுகள்தான்.
வெறுப்பு அரசியல்: 2002-ல் குஜராத்தில் நடந்தது, இப்போது மணிப்பூரில் நடக்கிறது. மே மாதம் தொடங்கிய கலவரத்தை இன்னும் மத்திய, மாநில பாஜக அரசுகள் கட்டுப்படுத்தவில்லை. வெறுப்பு அரசியல் மூலம் ஆதாயம் தேட முயல்வதால்தான் மணிப்பூர் இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது.
உரிமைகளை கைவிட்டவர்களும், காவு வாங்கியவர்களும் கைகோத்து வருகிறார்கள். இவர்களை எப்படியாவது வீழ்த்த வேண்டும். எனது தூதுவர்களான உங்களை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைக்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இக்கூட்டத்துக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை வகித்தார். முதன்மை செயலாளர் கே.என்.நேரு வரவேற்றார்.
முன்னதாக, காலையில் தொடங்கிய இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் சிவசங்கர், அன்பில் மகேஸ், டிஆர்பி ராஜா, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, திமுக வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ, அயலக அணிசெயலாளர் அப்துல்லா, மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி ஆகியோர் பேசினர்.
மருத்துவமனையில் ஆய்வு: இதைத் தொடர்ந்து, பெரிய மிளகுபாறையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
அப்போது, அங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களின் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து, சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.
நோயாளிகளுக்கான உணவு தயாரிப்பு கூடத்தை பார்வையிட்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தையும் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.
அப்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன், அரசு மருத்துவக் கல்லூரி டீன் டி.நேரு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கார்கில் வெற்றி தினம்: முன்னதாக நேற்று காலை சென்னையில் இருந்து திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின், கார்கில் வெற்றி தினத்தையொட்டி, கன்டோன்மென்ட் வெஸ்ட்ரி ரவுண்டானாவில் உள்ள மேஜர் சரவணன் நினைவுத் தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT