Published : 27 Jul 2023 06:58 AM
Last Updated : 27 Jul 2023 06:58 AM

சேத்தியாதோப்பு அருகே என்எல்சி விரிவாக்க பணிக்கு கால்வாய் வெட்டும் பணி: அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம்

என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்காக சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி பகுதியில் விளைநிலங்களில் கால்வாய் வெட்டும் பணி நடைபெறுகிறது.

கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் கையகப்படுத்திய நிலத்தில் சுரங்க விரிவாக்கப் பணி தொடங்கியது. இதனால் அப்பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கத்தாழை, கரிவெட்டி, மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக என்எல்சி நிர்வாகம் இழப்பீடு வழங்கியுள்ளது.

இந்த இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கவில்லை; வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், மாற்று குடியிருப்பு தர வேண்டும்; கடந்த காலங்களில் (2006 முதல் 2013 வரை) நிலத்தை கையகப்படுத்தியதற்கு, ரூ.6 லட்சம் இழப்பீடு பெற்றோருக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிலத்தை வழங்கிய கிராம மக்கள் முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இதில் என்எல்சி நிர்வாகம் கூறுவதை ஒரு தரப்பு ஏற்றும், மறுதரப்பு மறுத்தும் வருகின்றனர். இப்பிரச்சினை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர், அவ்வப்போது என்எல்சிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 25) கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், என்எல்சி நிர்வாகம் மற்றும் விவசாயிகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், என்எல்சி 2-ம் சுரங்க விரிவாக்கப் பணியின் ஒரு அங்கமாக நேற்று காலை வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்க வாய்க்கால் வெட்டும் பணி தொடங்கியது. ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெறுகிறது. விரிவாக்கம் செய்யப்படும் வாய்க்காலின் வழியே என்எல்சியின் சுரங்க நீர், பரவனாற்றுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதற்காக என்எல்சி நிறுவனத்தின் 30-க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, அப்பகுதியில் மண் வெட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணியின்போது அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

விரிவாக்கப் பணிக்காக இப்பகுதியில் நேற்று, விழுப்புரம் சரக டிஐஜி ஜியாவுல் ஹக், கடலூர் எஸ்.பி. ராஜாராமன் ஆகியோர் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் இயந்திரம், தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி பாமகவினர் 50-க்கும் மேற்பட்டோர் சேத்தியாதோப்பு குறுக்கு ரோட்டில் சாலை மறியல் செய்ய முயன்றனர். போலீஸார் அவர்களை கைது செய்து சேத்தியாதோப்பு தனியார் மண்டபத்தில் வைத்து, மாலையில் விடுவித்தனர். விருத்தாச்சலம், சேத்தியாதோப்பு சாலைகளில் மர்ம நபர்கள் சிலர் கார் டயர்களை கொளுத்தினர். தீயணைப்பு வீரர்கள் அவற்றை அணைத்தனர்.

நெய்வேலி - பண்ருட்டி சாலையில் கொஞசிக்குப்பம் பகுதியில் கல்வீசி தாக்கப்பட்டதில் அரசு விரைவு பேருந்து ஒன்றின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. அந்த பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

தலைவர்கள் கண்டனம்: இதற்கிடையே பயிர்களை அழித்து என்எல்சி விரிவாக்கப் பணி தொடங்கியுள்ளதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், வி.கே.சசிகலா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x