Last Updated : 18 Nov, 2017 04:20 PM

 

Published : 18 Nov 2017 04:20 PM
Last Updated : 18 Nov 2017 04:20 PM

சம்பளம் வழங்காததால் புதுச்சேரியில் பிஆர்டிசி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்து இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

புதுச்சேரி அரசின் சாலைப் போக்குவரத்து கழகத்தின் (பிஆர்டிசி) சார்பில் புதுச்சேரி மட்டுமின்றி சென்னை, நெல்லை, நாகர்கோயில், குமுளி, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், மாஹே, திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு மொத்தம் 143 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இங்கு ஓட்டுநர், நடத்துனர், பணிமனை என நிரந்தரம் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 1050 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்குக் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 1-ம் தேதியே ஊதியம் தரப்பட்டு வந்தது. இதனிடையே அண்மைக்காலமாக மாதம் 5, 7 தேதிகளில் ஊதியம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதத்துக்கான ஊதியம் ஏற்கெனவே வழங்கப்பட்ட தேதிகளில் வழங்கியது போல் தரப்படவில்லை. இதனிடையே புதுச்சேரியைச் சேர்ந்த நிரந்தர ஊழியர்களுக்கு மட்டும் 11-ம் தேதி ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் காரைக்கால், மாகே, ஏனாம் பகுதியைச் சேர்ந்த நிரந்தரம் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் தரப்படவில்லை.

அதேபோல் புதுச்சேரியைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கவில்லை. இன்று ஊதியம் வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் கொடுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்தும், பிஆர்டிசி நிர்வாகத்தைக் கண்டித்தும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 650 ஊழியர்கள் இன்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேருந்துகளை இயக்காமல் பணிமனையிலேயே நிறுத்தி விட்டனர். பல்வேறு ஊர்களுக்குச் சென்ற பேருந்துகளில் பயணிகளை இறக்கி விட்டு, மீண்டும் பேருந்துகளைப் பணிமனைக்கு கொண்டு வந்து நிறுத்தி, பணிமனை வாசல் முன்பு ,போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இது குறித்து ஊழியர்கள் கூறும்போது, மாதந்தோறும் 1ம் தேதி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிஆர்டிசியின் ஒரு சில அதிகாரிகள், தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு பிஆர்டிசியின் வருவாயைச் சுரண்டி ஊழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே தற்போது பிஆர்டிசி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாதந்தோறும் 1-ம் தேதி ஊதியம் வழங்குவதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்றனர்.

பிஆர்டிசி ஊழியர்களின் இந்த திடீர்ப் போராட்டத்தால் பயணிகள், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். காரைக்காலில் நேற்று பிஆர்டிசி ஊழியர்கள் ஊதியம் வழங்கக்கோரி போராட்டம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x